தமிழ்நாடு

வேளாண் மசோதாவால் ஏற்படும் பாதிப்புகளுக்கு என்ன பதில்? முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி

23rd Sep 2020 12:38 PM

ADVERTISEMENT

 

தி.மு.க. விவசாய - விவசாயத் தொழிலாளர் அணியால் பட்டியலிடப்பட்டுள்ள வேளாண் மசோதாக்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி என்ன பதில் வைத்திருக்கிறார்? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், விவசாயி என்று தன்னைக் கூறிக் கொள்பவர், விவசாயிகளுக்கு முழுக்க முழுக்க எதிரான வேளாண் சட்டங்களை ஆதரிக்க மாட்டார். 

விவசாயத்தைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்று சொல்லியிருக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. மத்திய அரசின் சட்டங்களைப் பற்றி ஆராய்ந்து கருத்துகளைச் சொல்ல விவசாயியாக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை; வேளாண்மை பற்றிய அடிப்படை அறிவும், விவசாயிகள் நலனில்  அன்பும் அக்கறையும் இருந்தாலே போதுமானது.            

ADVERTISEMENT

இந்தச் சட்டங்களை எதிர்த்து அ.தி.மு.க. உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் மாநிலங்கள் அவையில் பேசினாரே; அவருக்கும் விவசாயத்தைப் பற்றி எதுவுமே தெரியாததால்தான் அப்படிப் பேசினாரா?                                      
வடபுலத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள், இந்தச் சட்டங்களை எதிர்த்து ஆவேசமாகக் குரல் கொடுத்துப் போராடிக் கொண்டிருக்கிறார்களே, அவர்களுக்கு விவசாயத்தைப் பற்றி என்ன தெரியும் என்று கேட்பீர்களா?

“மத்திய பா.ஜ.க. அரசின் இந்தச் சட்டங்கள், கொள்முதல் கட்டமைப்பை அழித்து விடும்; விவசாயிகளைத் தனியார் கைகளுக்குத் தள்ளிவிடும்; குறைந்தபட்ச ஆதார விலைக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும்" என்று, இந்தச் சட்டங்களை எதிர்க்கும் சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் சொல்லியிருக்கிறாரே; அவருக்கும் விவசாயத்தைப்பற்றி எதுவும் தெரியாதா ?                    

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதிக் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், இடதுசாரிக் கட்சிகள், தி.மு.க. உள்ளிட்ட இந்தியாவின் 18 அரசியல் கட்சிகள், இந்தச் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று, இந்தியக் குடியரசுத் தலைவரைக் கேட்டுக் கொண்டுள்ளனவே; அவர்கள் அனைவருக்கும் விவசாயத்தைப் பற்றி எதுவுமே தெரியாதா?  

“விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை அளிக்கப்படும் என்ற உறுதிமொழி பொய்யானது" என்று, இந்தச் சட்டங்களை எதிர்த்துக் குற்றம்சாட்டியிருக்கும் அகில இந்திய விவசாயிகளின் ஒருங்கிணைப்புக் குழுவினருக்கு விவசாயம் பற்றி எதுவும் தெரியாதா? 

இன்று தி.மு.க. விவசாய - விவசாயத் தொழிலாளர் அணியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள முழுப்பக்க விளம்பரத்தில் விவசாயிகளுக்கு என்னென்ன பாதிப்புகள் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. நாட்டில் ஏராளமானோர் எதிர்க்கும் வேளாண் சட்டங்களை, ஆதரித்த முதல்வர் பழனிசாமி, பட்டியலிடப்பட்டுள்ள பாதிப்புகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

Tags : tn cm palanisamy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT