தமிழ்நாடு

கிசான் திட்ட முறைகேட்டில் ரூ.110 கோடி அளவுக்கு மோசடி: ககன்தீப் சிங் பேடி

8th Sep 2020 03:17 PM

ADVERTISEMENT

 

சென்னை: அதிகாரிகள் பயன்படுத்த வேண்டிய கடவுச்சொல்லை சிலர் முறைகேடாகப் பயன்படுத்தி கிசான் திட்டத்தில் மோசடி செய்திருப்பதாக வேளாண்துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

மேலும், கிசான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ரூ.110 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்றும் ககன்தீப் சிங் பேடி குறிப்பிட்டுள்ளார். அதே சமயம், முறைகேடாக பெற்ற தொகையை 45 நாள்களில் திரும்பப் பெற்று விடுவோம் என்றும் உறுதி அளித்துள்ளார்.

கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பது குறித்து தமிழக வேளாண்துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

ADVERTISEMENT

அப்போது அவர் கூறியதாவது, மத்திய அரசு கொண்டு வந்த கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மூன்று தவணைகளாக ஆறு ஆயிரம் செலுத்தப்படும். கிசான் திட்டத்தில் ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பயன் பெற முடியும். விவசாயிகளே நேரடியாக பதிவு செய்து கொள்ளும் வகையிலான நடைமுறை தற்போது உள்ளது.
தமிழக வருவாய் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் இணைந்து இதற்கான பணியில் ஈடுபட்டுள்னர். விவசாயிகளின் பெயர்கள் மற்றும் விவரங்களை சரிபார்க்கும் பணிக்காக அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டிய கடவுச்சொல்லை, சிலர் முறைகேடாகப் பெற்றுள்ளனர்.

அதைப் பயன்படுத்தி, சில இடைத்தரகர்களும், தனியார் கணினி மையங்களும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் 6 லட்சம் பயனாளிகள் சேர்க்கப்பட்டது தெரிய வந்துள்ளது. அதிகாரிகள் பயன்படுத்த வேண்டிய பாஸ்வேர்ட்டை முறைகேடாகப் பயன்படுத்தி மோசடி நடைபெற்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அப்பாவி ஏழை மக்களிடம் தகவல்களை பெற்று இடைத்தரகர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். நேரடியாக மக்களோ, விவசாயிகளோ முறைகேட்டில் ஈடுபட்டது குறைவாகவே உள்ளது. இடைத்தரகர்களே முறைகேட்டில் அதிகம் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி  உள்பட 13 மாவட்டங்களில் அதிகளவில் முறைகேடு நடந்துள்ளது.

இந்த மோசடி குறித்து விசாரிக்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்த சம்பவத்தில் தொடர்புடைய 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 80 பேர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மோசடியில் தொடர்புடைய 34 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மோசடியில் ஈடுபட்டவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, அதில் இருந்து பணம் கைப்பற்றப்பட்டு வருகிறது. இதுவரை 32 கோடி ரூபாய் வங்கிக் கணக்குகளில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது. நேரடியாக வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 110 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கூட தப்பிக்க முடியாது. மோசடியில் ஈடுபட்டது யாராக இருந்தாலும் நிச்சயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 

Tags : kisan scheme
ADVERTISEMENT
ADVERTISEMENT