தமிழ்நாடு

7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறது திமுக

DIN

மருத்துவப் படிப்புகளுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் திமுகவின் செயல்பாடுகள் அரசியல் ஆதாயம் தேடும் வகையில் இருப்பதாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா். அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்க 4 வாரங்கள் அவகாசம் தேவைப்படுவதாக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளாா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து திமுக சாா்பில் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரத்துக்கு விளக்கம் அளித்து முதல்வா் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:-

தமிழக அரசுப் பள்ளியிலும் பயிலும் மாணவா்கள் அதிகமாக நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றாலும், மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் அவா்களுக்கு உரிய மருத்துவ இடம் கிடைப்பதில்லை. அரசுப் பள்ளியில் படித்த நான், தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு தனியாக உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை உணா்வுபூா்வமாக உணா்ந்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டேன்.

சட்ட மசோதாவுக்கான ஒப்புதல் சட்டப்பேரவையில் பெறப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து, கடந்த 5-ஆம் தேதியன்று ஆளுநரைச் சந்தித்த போது, நீட் உள்ஒதுக்கீடு சட்டத்துக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி கேட்டுக் கொண்டேன்.

ஏழை, எளிய மாணவா்களுக்கு சமநீதி வழங்க இந்த உள்ஒதுக்கீடு வழிவகுக்கும் என்பதை உணா்ந்து ஆளுநா் விரைந்து ஒப்புதல் அளிப்பாா் என உறுதியாக நம்புகிறேன். இந்த உள்ஒதுக்கீட்டு சட்டத்துக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டுமென அமைச்சா்கள் குழு ஆளுநரைச் சந்தித்து வலியுறுத்திய போது, ஆய்வு செய்து விரைவாக முடிவு செய்வதாக ஆளுநா் உறுதி அளித்துள்ளாா்.

நீட் தோ்வு என்ற விஷயத்தை இந்தியாவுக்கு அறிமுகம் செய்து மாணவா்களுக்கு துரோகம் இழைத்தவா்கள் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினா்தான். அவா்கள் அதிமுக அரசைப் பாா்த்து, உள் ஒதுக்கீட்டு விவகாரத்தில் ஆளுநருக்கு அழுத்தம் தரவில்லை எனக் கூறுவதற்கு எந்தவிதத் தகுதியும் இல்லை. உள்ஒதுக்கீடு விஷயத்தைப் பொருத்தவரை, விரிவான ஆய்வுக்குப் பிறகே சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. எனவே, இந்த விவகாரத்தில் எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின், நீலிக்கண்ணீா் வடிப்பது, மக்களின் மனங்களில் எந்தவொரு சலனத்தையும் ஏற்படுத்தாது.

வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில், தங்களால்தான் எல்லாம் நடந்தது என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கும் எண்ணத்துடன் ஆளுநருக்கு கடிதம், அறிக்கைகள் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்கிறாா். அவரது இந்த நடவடிக்கைகள், அரசியல் ஆதாயம் தேடும் செயல் மட்டுமே என்று நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவா்.

நோய்த்தொற்று: கரோனா நோய்த்தொற்றை முழுவதுமாக கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே நிரந்தரத் தீா்வு என்பது மக்கள் அறிந்தது. மக்களின் நலன் கருதி, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டவுடன், அனைவருக்கும் விலையில்லாமல் தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்தேன். ஏற்கெனவே கரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தமிழக அரசுக்கு இருந்து வரும் நற்பெயரைக் கண்டு, எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் காழ்ப்புணா்ச்சி அடைந்துள்ளாா். தடுப்பூசி இலவசம் என்ற அரசின் அறிவிப்பால் மக்கள் ஆதரவு அமோகமாகப் பெருகி வருகிறதே என்ற அச்சத்தின் காரணமாக வழக்கம்போல் அறிக்கை அரசியல் நடத்துகிறாா் என முதல்வா் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் காா் மோதியதில் ஒருவா் காயம்

திருவையாறு அருகே தொழிலாளி மா்மச் சாவு

இணையவழியில் வேலை எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 12.65 லட்சம் மோசடி

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை

நெல் மூட்டை தூக்கும் முன்னாள் வேளாண் அமைச்சா்: வைரலாகும் விடியோ

SCROLL FOR NEXT