தமிழ்நாடு

பெரியாறு அணையிலிருந்து 7-ந்தேதி முதல் நீர் திறக்க முதல்வர் உத்தரவு

3rd Oct 2020 12:43 PM

ADVERTISEMENT


சென்னை: தேனி மாவட்டத்தில் உள்ள பெரியாறு அணையிலிருந்து வரும் 7-ம் தேதி முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தேனி மாவட்டத்தில் உள்ள பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள பி.டி.ஆர். மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. 

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 100 கன அடி வீதம் பாசனத்திற்காக 7.10.2020 முதல் 120 நாட்களுக்கு மொத்தம் 1037 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன். இதனால், தேனி மாவட்டம், தேனி வட்டம் மற்றும் உத்தமபாளையம் வட்டங்களில் உள்ள 5146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தேனி மாவட்டம், பெரியாறு அணையிலிருந்து 18ம் கால்வாயில் (பழனிவேல் ராஜன் கால்வாய்) தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையினை ஏற்று, தேனி மாவட்டம், 18ம் கால்வாயின் (பழனிவேல் ராஜன் கால்வாய்) கீழ் உள்ள 4614.25 ஏக்கர் ஒருபோக பாசன நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து 7.10.2020 முதல் 30 நாட்களுக்கு, விநாடிக்கு 98 கனஅடி வீதம், மொத்தம் 255 மி.கன அடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன்.

ADVERTISEMENT

இதனால், தேனி மாவட்டம், 18ம் கால்வாயின் (பழனிவேல் ராஜன் கால்வாய்) கீழ் உள்ள 4614.25 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT