தமிழ்நாடு

கோவில்பட்டியில் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

கோவில்பட்டி: கோவில்பட்டி பிரதான சாலையில் நீர்வரத்து ஓடை  ஆக்கிரமிப்புகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.

கோவில்பட்டி பிரதான சாலையில் அருள்மிகு பூவனநாதசுவாமி திருக்கோவில் தேவஸ்தானப் பயன்பாட்டிற்கு உள்பட்ட 108 கட்டமைப்புகள் மற்றும் தனிநபர் ஆக்கிரமிப்பில் 25 கடைகள் இருந்து வந்தன. 

இந்நிலையில், இலக்குமி ஆலை மேம்பாலம் முதல் ரயில்வே மேம்பாலம் வரை சுமார் ரூ.7 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, சாலை விரிவாக்கப் பணியை, ஓடை மீது கட்டப்பட்டுள்ள நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றிய பின்னரே, சாலை விரிவாக்கப் பணி முறையாக நடைபெற வேண்டும் என ஆக்கிரமிப்பு மீட்புக் குழுவினர் மற்றும் அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். 

இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் 2019 ஆக.17ஆம் தேதி நடைபெற்றது.

அதையடுத்து, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி 2019 ஆக.26 ஆம் தேதி நடைபெற்றது. அதில், ஓடை மீது கட்டப்பட்ட தனிநபர் ஆக்கிரமிப்பு கட்டடங்களான 13 கடைகள் அகற்றப்பட்டன. எஞ்சிய 12 கடைகள் மற்றும் தேவஸ்தானப் பயன்பாட்டிற்கு உள்பட்ட 108  கட்டமைப்புகளும் நீதிமன்ற வழக்கு நிலுவைக் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 

இந்நிலையில், ஓடை மீது கட்டப்பட்ட தனிநபர் ஆக்கிரமிப்பு கட்டடங்களான 12 கடைகள் குறித்த நீதிமன்ற வழக்குகளில் எவ்வித தடை உத்தரவும், தற்போது வரை பிறப்பிக்கபடாததையடுத்து தனிநபர்களால் ஓடைப் புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து ஓடை மீது கட்டப்பட்டுள்ள கட்டடங்களை, 20019 செப்.11ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஆக்கிரமிப்புதாரர்கள் முழுவதுமாக காலி செய்ய வேண்டும், தவறும்பட்சத்தில் செப்.12 ஆம் தேதி அகற்றப்படும் என வருவாய்த் துறையினரால் அறிக்கை வழங்கப்பட்டிருந்தது.

இதையடுத்து 12 ஆம் தேதி கோட்டாட்சியர் விஜயா தலைமையில், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் ராஜூ, வட்டாட்சியர் மணிகண்டன், நிலவரித் திட்ட தனி வட்டாட்சியர் முருகானந்தம், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சூரியகலா, நகராட்சி ஆணையர் (பொ) கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலையில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் உள்ள கடைகள் அகற்றப்பட்டது.

இந்நிலையில், பூவனநாத சுவாமி கோவிலுக்குப் பாத்தியப்பட்ட நீரவரத்து ஓடை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ள 108 கட்டமைப்புகளுக்கும், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மற்றும் உச்சநீதிமன்றத்தில் இருந்த வழக்குகளுக்கு தீர்வு கிடைக்கப்பட்டதையடுத்து, மாவட்ட ஆட்சியர் நீர்வரத்து ஓடைகளை அகற்றுவதற்கான அறிவிப்பு ஆணையை கோவில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.

இதையடுத்து, வருவாய் துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஒலிபெருக்கி மூலம் நீர்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பாளர்கள் கட்டடங்களில் இருந்து தங்களது பொருள்களை காலி செய்துகொள்ளுமாறும், கட்டடங்கள் நவம்பர் 27ஆம் தேதி அதிகாலை இடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து சனிக்கிழமை காலை 6  மணிக்கு கோட்டாட்சியர் விஜயா தலைமையில், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் ராஜு, வட்டாட்சியர் மணிகண்டன், மின்வாரிய செயற்பொறியாளர் சகர்பான், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் முருகானந்தம், நகராட்சி ஆணையர் ராஜாராம், பொறியாளர் கோவிந்தராஜன், நகரமைப்பு அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில்,  7  ஜே.சி.பி., 2 பிரேக்கர், 2 கிட்டாச்சி உதவியுடன் 108  நீர்வரத்து ஓடை கட்டமைப்புகள் அகற்றும் பணி தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் விஷ்ணுசந்திரன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை பார்வையிட்டார். 
ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி, காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் கலைகதிரவன் (கோவில்பட்டி), சங்கர் (மணியாச்சி) மற்றும் 10 ஆய்வாளர்கள், 25 உதவி ஆய்வாளர்கள் உள்பட 270 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

SCROLL FOR NEXT