தமிழ்நாடு

புதுச்சேரி அருகே கரையைக் கடந்த புயல்

DIN

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் புதன்கிழமை இரவு 10.58 மணிக்கு புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடக்கத் தொடங்கி வியாழக்கிழமை அதிகாலை 3.58 மணிக்கு முழுமையாக கரையைக் கடந்தது. 

புயல் கரையைக் கடந்தபோது, தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் மணிக்கு 110 கி.மீ. முதல் 120 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்தது. பல இடங்களில் தகவல் தொடர்பும், மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. பல இடங்களில் தென்னை  உள்ளிட்ட மரங்கள் சூறாவளி காற்றால் அடியோடு சாய்ந்தன. பல இடங்களில் மின் கம்பங்கள் சரிந்தன.

மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை, வானூர், மயிலம், செஞ்சி உள்ளிட்ட  இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

கடலூர் மாவட்டம் மனம்பாடி கிராமத்தில் 200 ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. 

புதுச்சேரியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் வேரோடு சாய்ந்த பழமையான மரங்கள் விழுந்ததால் மின்சார கம்பிகளும் அறுந்து விழுந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 

அதிகாலை கரையைக் கடந்த புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து 50 கி.மீ. வடமேற்கே நிலப்பகுதியில் நிலை கொண்டுள்ளது. 

"நிவர்' புயலின் தாக்கம் காரணமாக தமிழகத்தில் அதிகபட்சமாக வடசென்னையில் 160 மி.மீ.  மழை பதிவானது.

தீவிர புயல் கரையைக் கடந்துள்ள நிலையில்,  கடலோர மாவட்டங்களில் புயலின் தாக்கம் 6 மணி நேரத்துக்கு தொடரும். அதன்பிறகு, அடுத்த 6 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழந்து புயலாகவும், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறக்கூடும்.  இதன் காரணமாக வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை (நவ.26, 27) ஆகிய இரு நாள்கள் மழை தொடரும். குறிப்பாக வடதமிழகத்தில் பல இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் அநேக இடங்களில் நாளை வெள்ளிக்கிழமை (நவ.27) மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். சில வேளைகளில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி பலத்த மழையும், ஒருசில இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும்  பெய்யக்கூடும். சூறாவளி காற்று மணிக்கு 65 கி.மீ. முதல் 75 கி.மீ.வேகத்திலும் இடையிடையே 85 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும். இதன் காரணமாக, கூரை வீடுகள் மற்றும் குடிசைகள், மேற்கூரைகள் பாதிப்புக்குள்ளாகும்.

பொதுமக்கள் வீட்டினுள் பாதுகாப்பாக இருக்குமாறும் அரசு - பேரிடர் மேலாண்மை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றார் அவர்.

புதிய காற்றழுத்தத் தாழ்வு: தென் கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் கடல் பகுதி அருகில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நவ.29-ஆம் தேதி உருவாகவுள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து, தமிழகத்துக்கு மழை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிவர் புயல் கரையைக் கடந்தாலும், கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னையின் தாழ்வான பகுதிகளான கிழக்கு தாம்பரம், வேளச்சேரி, முடிச்சூர், திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து ஒவ்வொரு வீடும் தனித்தனி தீவுகளாக காட்சியளித்தன. 

நிவர் புயல் காரணமாக சென்னை தாம்பரத்தில் 31.4 செ.மீ., விழுப்புரத்தில் 28 செ.மீ., சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் 27.8 செ.மீ., கடலூரில் 27.5 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. 

சென்னையில் நிவர் புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 267 மரங்கள் சாய்ந்தன, இதுவரை 223 மரங்கள் அகப்பட்டுற்றுள்ளன, தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

SCROLL FOR NEXT