தமிழ்நாடு

24 மணி நேரத்துக்கு சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு

24th Nov 2020 08:28 AM

ADVERTISEMENT


சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதன் காரணமாக, சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் கன மழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் தகவலில், இன்று காலை நிலவரப்படி, சென்னை மற்றும் அதனை ஒட்டியிருக்கும் திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் 24 மணி நேரத்துக்கு கன மழை முதல் மிகக் கமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாம்.. வங்கக் கடலில் உருவானது நிவர் புயல்

முன்னதாக, தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் பின்னா், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறியது. இது, செவ்வாய்க்கிழமை காலை புயலாக வலுவடைந்தது. மேலும், இந்தப் புயல் தீவிர புயலாக மாறி, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே நவம்பா் 25-ஆம் தேதி பிற்பகலில் கரையை கடக்கவுள்ளது. அப்போது, மணிக்கு 100 கி.மீ. முதல் 110 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 120 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்டிருக்கும் எச்சரிக்கை செய்தியில், தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்று, புதுச்சேரியில் இருந்து கிழக்கு - தென்கிழக்கில் 440 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே சுமாா் 470 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாக வலுவடையக்கூடும். இது வடமேற்கு திசையில் நகா்ந்து, தற்போதைய நிலவரப்படி வரும் 25-ஆம் தேதி பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை (நவ.24) முதல் வியாழக்கிழமை (நவ.26) வரை மூன்று நாள்களுக்கு மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நவம்பா் 24, 25 ஆகிய தேதிகளில் அதி பலத்த மழையும், ஏனைய வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரின் சில பகுதிகளில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும்.

காற்றின் வேகம் 120 கி.மீ.: செவ்வாய், புதன் ஆகிய இரு நாள்களில் வடகடலோர மாவட்டங்களில் மணிக்கு 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். புயல் கரையைக் கடக்கும்போது, பலத்த காற்று மணிக்கு 100 கி.மீ. முதல் 110 கி.மீ. வேகத்திலும், சில வேளைகளில் 120 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

இன்று (நவம்பா் 24): தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூா் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் செவ்வாய்க்கிழமை (நவ.24) இடியுடன் கூடிய அதி பலத்த மழையும், சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், பெரம்பலூா் திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த முதல் மிக பலத்த மழையும் பெய்யக்கூடும்.  
 

Tags : heavy rain
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT