தமிழ்நாடு

சித்தோட்டில் வீட்டுமனை வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

23rd Nov 2020 03:16 PM

ADVERTISEMENT

 

சித்தோட்டில் வீட்டுமனை வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் திங்கள்கிழமை பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள கன்னிமார்காடு பகுதியில் கடந்த 2018-ஆம் ஆண்டு  ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 58 மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது இப்பகுதியில் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் குடியிருப்போருக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், பல்வேறு பகுதிகளில் வசிப்போருக்கும் வீட்டுமனை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 70க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்ததோடு, கன்னிமார்காடு பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனைகளை அளவீடு செய்து முறையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்குக் குடியிருப்புகள் கட்டித்தர வேண்டுவது உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

இத்தகவலறிந்த பவானி காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் காவல்துறையினர் விரைந்து சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், வருவாய்த் துறை அலுவலர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகளின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT