தமிழ்நாடு

கோயம்பேடு சந்தை குறித்து முன்பே எச்சரித்தோம்: முதல்வர் பழனிசாமி

13th May 2020 06:20 PM

ADVERTISEMENT

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தைப் பகுதியில் கரோனா பரவும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்ததை அடுத்து, தமிழக அரசும் முன்பே எச்சரித்திருந்தது என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோயம்பேடு காய்கறி சந்தையில் கரோனா தொற்று பரவியது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, இந்தியாவிலேயே மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது.

சென்னையில் இருந்து சொந்த மாவட்டங்களுக்குச் சென்றவர்கள் மூலமாக தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கரோனா தொற்று அதிகரித்தது. மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் சென்னையில் கரோனா தொற்று அதிகமாக உள்ளது.

ADVERTISEMENT

சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் சென்ற அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  பல்வேறு பகுதிகளில் இருந்து சொந்த மாவட்டங்களுக்குச் சென்றவர்களாலும் கரோனா தொற்று அதிகரித்துள்ளது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கரோனா தொற்றுப் பரவும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் முன்னரே எச்சரித்திருந்தனர். அதே சமயம், சென்னைக்கு வெளியே தற்காலிக காய்கறி சந்தையை அமைத்து மொத்த காய்கறி விற்பனையை மேற்கொள்ளவும் பரிந்துரைத்திருந்தனர்.

ஆனால், சென்னைக்கு வெளியே அமைக்கப்படும் தற்காலிக காய்கறி சந்தைக்குச் செல்ல கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரிகள் விரும்பவில்லை. சந்தையை மாற்றவும் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்று கூறிய வியாபாரிகள், தமிழக அரசின் நடவடிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை.

கோயம்பேடு சந்தையை தற்காலிகமாக மூடுவது தொடர்பாக வியாபாரிகள் சங்கத்திடம் பல முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் உரிய முடிவு எட்டப்படவில்லை.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு ஏராளமான மக்கள் வந்து செல்லும் இடமாக உள்ளது. அதனால் கரோனா பரவியது. சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து வெளி மாவட்டங்களுக்குச் சென்றவர்கள் மூலமாக பல்வேறு மாவட்டங்களிலும் கரோனா தொற்று பரவியது.

இந்த நிலையில்தான் சென்னைக்கு வெளியே திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டு தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

எனவே, தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால்தான் கோயம்பேடு சந்தையில் கரோனா தொற்று பரவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை.

மருத்துவமனைகளில் இருந்து படிப்படியாக கரோனா  நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பி வருகிறார்கள்.

வெளி மாநிலத்தில் இருக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருக்கும் வெளிமாநில நபர்கள் சொந்த ஊர்  செல்வதற்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என்றும் தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 

Tags : tamilnaducm
ADVERTISEMENT
ADVERTISEMENT