தமிழ்நாடு

சென்னை, காஞ்சி, ஈரோடு மாவட்டங்களை முடக்க உத்தரவு

23rd Mar 2020 02:04 AM

ADVERTISEMENT

 

சென்னை: கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக, நாடு முழுவதும் 75 மாவட்டங்களை முடக்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3  மாவட்டங்களை முடக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க  மத்திய அரசின் அமைச்சரவைச் செயலர், பிரதமரின் முதன்மைச் செயலர் ஆகியோர் மாநிலங்களின் தலைமைச் செயலர்களுடன் காணொலி மூலம் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினர்.  

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த சுய ஊரடங்கு அழைப்புக்கு மக்கள் தாங்களாக முன்வந்து பெருமளவில் ஆதரவு அளித்ததாக, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் அப்போது தெரிவித்தனர்.

ADVERTISEMENT

கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் முயற்சியாக, அத்தியாவசியத் தேவை அல்லாத பயணிகள் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள்,  மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்துக்குத் தடை உள்பட, பல்வேறு கட்டுப்பாடுகளை வரும் மார்ச் 31 வரையில் நீட்டிக்க  வேண்டிய அவசர அவசியம் இருப்பதாக இந்தக் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

விரிவான கலந்துரையாடல்களுக்குப் பிறகு, கரோனா வைரஸ் கண்டறியப்பட்ட அல்லது அதுதொடர்பான மரணங்கள் உறுதி செய்யப்பட்ட 75 மாவட்டங்களிலும் அத்தியாவசிய சேவைகள் செயல்பாட்டுக்கு மட்டுமே அனுமதி அளிப்பது என்று  கூட்டத்தில்  முடிவு செய்யப்பட்டது . நிலைமையை மதிப்பீடு செய்து அதற்கேற்ப மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை நீட்டித்துக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

மத்திய அரசு முடக்க உத்தரவிட்ட  75 மாவட்டங்களில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. 

இதனால் இந்த மூன்று மாவட்டங்களில் எவையெல்லாம் செயல்படலாம். எவையெல்லாம் செயல்படாது என்ற விவரத்தை தமிழக அரசு  தனியாக அறிவிக்கும். அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே மக்கள் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். மற்ற செயல்பாடுகளுக்குத் தடை விதிக்கப்படும்.

நாடு முழுவதும் 75 மாவட்டங்கள்

புது தில்லி: கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் இருக்கும் 75 மாவட்டங்களின் எல்லைகள் மூடப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதன் காரணமாக மாநிலங்களுக்கு இடையிலான அரசு பேருந்து சேவையை 31-ஆம் தேதி வரை நிறுத்திவைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:

அனைத்து மாநில தலைமைச் செயலர்கள், அமைச்சரவை செயலர்கள், பிரதமருக்கான முதன்மைச் செயலர் ஆகியோர் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது, தமிழகம், கர்நாடகம், பஞ்சாப், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், கேரளம் ஆகிய மாநிலங்களில் கரோனாவால்  பாதிக்கப்பட்டவர்கள் உள்ள 75 மாவட்டங்களின் எல்லைகளை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

மிகவும் அவசியத் தேவைகள் இருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக மாநில அரசுகள் உத்தரவு பிறப்பிக்கும்.

மேலும், மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 31-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டியது அவசியம் என்று இந்தக் கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டில் கரோனாவால் 300-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கர்நாடகத்தில் பெங்களூரு நகரம், பெங்களூரு ஊரகம், மங்களூரு, மைசூரு, கலபுர்கி, தார்வாட், சிக்கபல்லபுரா, குடகு, பெலகாவி ஆகிய 9 மாவட்டங்களின் எல்லைகள் மூடப்படவுள்ளன. இதேபோல் கேரளத்தில் திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், பாலக்காடு, மலப்புரம், கண்ணணூர், காசர்கோடு ஆகிய 9 மாவட்டங்களின் எல்லைகள் மூடப்படவுள்ளன.


மாநிலங்களுக்கிடையே பேருந்துகள் இயங்காது

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் அரசு, தனியார் பேருந்துகள் மார்ச் 31-ஆம் தேதி வரை நிறுத்தம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இது குறித்து தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் ஞாயிற்றுக்கிழமை முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை நிறுத்தப்படுகிறது.  

மெட்ரோ ரயில்களும் இயங்காது: சென்னை நகரில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவைகள் மார்ச் 22-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் மார்ச் 31-ஆம் தேதி நள்ளிரவு வரை நிறுத்தப்படுகிறது.  

கரோனா பரவலைத் தடுப்பதற்காக தமிழக அரசு எடுத்து வரும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உள் மாவட்டங்களில் குறைந்த அளவில் பேருந்துகள்பயணிகளின் தேவைக்கேற்ப, மிகக் குறைந்த அளவில் உள் மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.  

திங்கள்கிழமை (மார்ச் 23) முதல் சென்னை மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப மிகக் குறைந்த அளவில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை புறநகர் ரயில் சேவையும் ரத்து

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக, தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் மார்ச் 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.  குறிப்பாக சென்னையில் புறநகர் ரயில்கள் (மின்சார ரயில்கள்)  ஓடாது  என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது. 
சென்னையில், கடற்கரை-தாம்பரம்-திருமால்பூர்-அரக்கோணம்,  கடற்கரை-வேளச்சேரி, மூர் மார்க்கெட் வளாகம்(எம்.எம்.சி)  - கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மற்றும் திருத்தணி வழித்தடங்களில் 600-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களின் சேவைகள் நடைபெறுகின்றன. இந்த ரயில்களில் தினசரி 9 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். இந்த ரயில்கள் மார்ச் 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுள்ளது.  புறநகர் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் பணிக்கு செல்லும் ஊழியர்கள் பாதிக்கப்படும் நிலை இருந்தாலும், கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் பல்வேறு தரப்பினர் வரவேற்று உள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT