தமிழ்நாடு

பவானி, அம்மாபேட்டையில் காவிரி ஆற்றுப்பாலங்கள் சீல் வைத்து மூடல்

DIN

கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஈரோடு மாவட்டத்தின் இயல்பான செயல்பாடுகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் செய்வதறியாமல் திகைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதித்த பகுதியாகக் கண்டறியப்பட்ட ஈரோடு மாவட்டத்தில் வரும் 31-ம் தேதி வரையில் செயல்பாடுகளை நிறுத்தி வைத்து மத்திய அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. மக்கள் சுய ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டதால் அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. தமிழக அரசு இன்று காலை 5 மணி வரையில் ஊரடங்குகளை நீட்டித்திருந்தது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தின் செயல்பாடு முடக்கும் அறிவிப்பு வெளியான நிலையில் இன்று இயல்பு நிலை திரும்பவில்லை.  உணவு விடுதிகள், மளிகைக் கடைகள், தேனீர் கடைகள் திறக்கப்படவில்லை. மருந்துக் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன.  பவானி, அந்தியூர், அம்மாபேட்டை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளில் இந்நிலையே காணப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் பவானிக்கும், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தையும் இணைக்கும் இரு பாலங்கள் உள்ளன. இவ்விரு பாலங்களின் நுழைவாயில்களில் தடுப்புகள் வைத்துக் கட்டப்பட்டதோடு, சீல் வைத்து மூடப்பட்டது. இரு மாவட்ட எல்லைகளுக்குள்ளும் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளித்த பின்னரே அனுமதிக்கப்படுகிறது.

பவானியிலிருந்து குமாரபாளையத்துக்குச் செல்லும் விசைத்தறி நெசவுத் தொழிலாளர்கள், கட்டடத் தொழிலாளர்கள் அனுமதிக்கப்படாததால் பாலத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று, காவிரி ஆற்றில் ஊராட்சிக்கோட்டை, குதிரைக்கல் மேடு, நெருஞ்சிப்பேட்டை, கோனேரி பட்டி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள கதவணை நீர் மின்நிலையத்தின் பாலத்தில் அனுமதிக்கப்பட்டு வந்த வாகனப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு, நுழைவாயில்கள் பூட்டப்பட்டன.

ஈரோடு மாவட்டம், நெருஞ்சிப்பேட்டைக்கும், சேலம் மாவட்டம்,  பூலாம் பட்டிக்கும் இடையே காவிரி ஆற்றில் நடைபெற்று வந்த படகுப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. பவானியிலிருந்து பிற ஊர்களுக்கு மிகக்குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும், போதிய பயணிகள் இல்லாமல் காளியாகவே சென்றன. தேர்வுக்குச் செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

படகுப் போக்குவரத்து நிறுத்தம்

தமிழக - கர்நாடக எல்லையான அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப் பாதையில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. தமிழகத்துக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் தாமரைக்கரை சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டு, அப்படியே திருப்பி அனுப்பப்படுகிறது. பொதுமக்கள் முகத்தில் கைக்குட்டைகளைக் கட்டியபடியும், முகக்கவசங்கள் அணிந்தும் அத்தியாவசியத் தேவைகளுக்குச் சென்று வருகின்றனர்.

பவானி டிஎஸ்பி சேகர், ஆய்வாளர்கள் தேவேந்திரன், ரவி மற்றும் போலீஸார் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் அறிவிப்பால் பவானி நகரம் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதேவேளையில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானாவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT