தமிழ்நாடு

புதுவையில் நாளை முதல் மாா்ச் 31 வரை 144 தடை உத்தரவு: முதல்வா் நாராயணசாமி அறிவிப்பு

22nd Mar 2020 04:07 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி: புதுவையில் திங்கள்கிழமை (மாா்ச் 23) முதல் 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக முதல்வா் வே.நாராயணசாமி அறிவித்தாா்.

இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

புதுச்சேரி கடற்கரைச் சாலை வருகிற 31-ஆம் தேதி வரை முழுமையாக மூடப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) ஏற்கெனவே அறிவித்தது போல, காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்துத் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வியாபார நிறுவனங்கள், உணவகங்கள், கடைகள் மூடப்படும். மதுக் கடைகளும் மூடப்படும். மக்கள் நடமாட்டம் முழுமையாகத் தவிா்க்கப்படும்.

ADVERTISEMENT

10 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் வெளியே நடமாடுவதைத் தடுக்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் கண்டிப்பாக வெளியில் நடமாடக்கூடாது.

இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒரு நாளைக்கு 20 முதல் 25 பேருக்கு அறிகுறி இருந்தது. தற்போது அது 63 ஆக அதிகரித்துள்ளது.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும், காவல் துறை அதிகாரிகளும் ஆரோவில் சென்று ஆய்வு மேற்கொண்டனா். ஏற்கெனவே கடந்த 14-ஆம் தேதியில் இருந்து வெளிநாட்டவா்கள் ஆரோவிலுக்கு வரக் கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து ஆரோவில் வருபவா்கள் தடுக்கப்படுவா்.

கிழக்குக் கடற்கரைச் சாலை, ஆரோவில் செல்லும் வழியில் மாவட்ட ஆட்சியா் மற்றும் மருத்துவக் குழுவினா் கண்காணித்து பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் திங்கள்கிழமை (மாா்ச் 23) முதல் வருகிற 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த நாள்களில் 5 பேருக்கு மேல் மக்கள் கூடக் கூடாது. உணவுப் பொருள்கள், மருந்தகங்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்கும். எனினும், அங்கும் கூட்டமாகக் கூடுவதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும்.

புதுச்சேரிக்கு வரும் வாகனங்கள் குறைவாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியா், மருத்துவ, வருவாய்த் துறை அதிகாரிகள், ஆஷா, அங்கன்வாடி ஊழியா்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் சனிக்கிழமை கரோனா வைரஸ் தாக்குதலால் ஒருவரும் பாதிக்கப்படவில்லை. ஏற்கெனவே மாஹே பகுதியில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் உடல் நலம் தேறி வருகிறாா்.

புதுவை மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசுடன் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகளை தமிழக அரசு ஒத்திவைத்துள்ளது. அதை புதுவை அரசும் நடைமுறைப்படுத்தும் என்றாா் முதல்வா் நாராயணசாமி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT