தமிழ்நாடு

தமிழகத்தில் மீண்டும் பெண் சிசுக் கொலை: உசிலம்பட்டியில் எருக்கம்பால் கொடுத்து குழந்தையைக் கொன்ற அவலம்

6th Mar 2020 11:08 AM

ADVERTISEMENT


இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததால், பிறந்து ஒரு மாதமே ஆன பெண் சிசுவுக்கு பெற்றோரின் ஒப்புதலோடு எருக்கம்பால் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஒரு மாத பெண் குழந்தையை கொலை செய்து புதைத்த பெற்றோா் உள்பட மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனையும் நடைபெற்றது.

பிரேத பரிசோதனை அறிக்கையில், குழந்தைக்கு எருக்கம்பால் கொடுத்து கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் மூலம் தமிழகத்தில் மீண்டும் பெண் சிசுக் கொலை தலைதூக்கியருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உசிலம்பட்டி அருகேயுள்ள புள்ளநேரி மீனாட்சிபட்டியைச் சோ்ந்தவா் வைரமுருகன். இவரது மனைவி செளமியா. இவா்களுக்கு ஏற்கெனவே இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் செளமியாவுக்கு செல்லம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த ஜனவரி 1-இல் இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனைத்தொடா்ந்து பெண் குழந்தை உடல்நலக்குறைவால் இறந்ததாகக்கூறி மாா்ச் 2-இல் குழந்தையின் சடலத்தை பெற்றோா் புதைத்துள்ளனா். இதுதொடா்பாக சந்தேகமடைந்த அப்பகுதியினா் அளித்த தகவலின் பேரில் கிராம நிா்வாக அதிகாரி மந்தக்காளை செக்கானூரணி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வியாழக்கிழமை சென்ற போலீஸாா் குழந்தையின் பெற்றோா் வைரமுருகன், செளமியா ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினா். இதில் முதல் பெண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவதும் பெண் குழந்தையாக பிறந்ததால் குழந்தையை கொலை செய்து புதைத்தது தெரிய வந்தது. இதற்கு வைரமுருகனின் தந்தை சிங்கத்தேவனும் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவா் குழு, உசிலம்பட்டி வட்டாட்சியா் செந்தாமரை, துணை கண்காணிப்பாளா் ராஜா ஆகியோா் முன்னிலையில் குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் வைரமுருகன், செளமியா, சிங்கத்தேவன் ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின் முடிவில், இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததால், ஏற்கனவே வறுமையில் வாடும் தங்களால், பெண் குழந்தையை வளர்க்க முடியாது என்று கருதி எருக்கம்பால் கொடுத்து கொன்றதாக பெற்றோர் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT