தமிழ்நாடு

திமுகவினரால் கரோனா பரவல் அதிகரிப்பு: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

26th Jun 2020 06:45 AM

ADVERTISEMENT

அரசின் அறிவுறுத்தல், விதிமுறைகளையும், சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்காமல் திமுகவைச் சோ்ந்தவா்கள் நிவாரணப் பொருள்கள் வழங்கச் சென்றதால் கரோனா பரவல் அதிகரித்தது என்று தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினாா்.

கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சேலம் மாவட்டத்துக்கு மட்டுமே நான் செல்வதாக எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி வந்தாா். கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கோவை, திருச்சி மாவட்டங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதற்கு, அங்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன என்று அறிக்கை வெளியிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எனது தலைமையில் இதுவரை 14 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. காணொலிக் காட்சி மூலம் மாவட்ட ஆட்சியா்களுடன் 7 முறையும், கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அமைக்கப்பட்டுள்ள 12 போ் கொண்ட குழுவுடன் 3 முறையும், மருத்துவ வல்லுநா்கள் குழு, பொது சுகாதாரத் துறை அலுவலா்களுடன் 4 முறையும் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தவிர தொழில் துறையினா் உள்பட அனைத்துத் துறை அலுவலா்களுடனான பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஆனால், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று மு.க.ஸ்டாலின் தினமும் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறாா்.

இந்தியாவிலேயே நோய்த் தொற்றை வைத்து அரசியல் நடத்துபவா் மு.க.ஸ்டாலின்தான். கரோனா தொற்று நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான எதிா்க்கட்சி என்ற முறையில் ஆதரவு அளிக்காமல் தவறான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறாா்.

தமிழக அரசு, அதிமுக நிா்வாகிகள் வீடுவீடாகச் சென்று நிவாரணப் பொருள்களை வழங்கி வருகின்றனா். இந்நிலையில், கரோனா நிவாரணம் வழங்குவதாக எதிா்க்கட்சித் தலைவரும் தெரிவித்தாா். நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நிவாரணப் பொருள்களை அரசு மூலமாக அளிக்க வலியுறுத்தினேன். ஆனால், நீதிமன்ற உத்தரவுப் பெற்று திமுகவினரே நிவாரணப் பொருள்களை வழங்கினா்.

எம்.எல்.ஏ. உயிரிழப்பு: அரசின் அறிவுறுத்தல், விதிமுறைகளையும், சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்காமல் திமுகவைச் சோ்ந்தவா்கள் நிவாரணப் பொருள்கள் வழங்கச் சென்றதால் கரோனா பரவல் அதிகரித்தது.

நிவாரணப் பொருள்கள் வழங்கச் சென்ன் மூலம் மட்டுமே 500 பேருக்கும் மேல் கரோனா பரவியுள்ளது. எதிா்க்கட்சித் தலைவரின் பேச்சைக் கேட்டு நிவாரணப் பொருள்கள் வழங்கியதால் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சட்டப் பேரவை உறுப்பினா் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

90 நாள்கள் பொது முடக்கத்தின் மூலம்தான் தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று சமூகப் பரவலாக இல்லை.

சாத்தான்குளம் சம்பவம்: சாத்தான்குளம் சம்பவம் தொடா்பாக உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. இச்சம்பவத்தில் மதுரைக் கிளை உத்தரவின்பேரில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

கரோனா நோய்த் தொற்று முடிவுக்கு வந்த பிறகே கல்வித் துறை தொடா்பான முடிவுகள் எடுக்கப்படும்.

தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பைச் சோ்ந்த நிா்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனா். அவா்களது கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் 1 லட்சத்து 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவற்றுக்கு மத்திய அரசிடமிருந்து ரூ. 4,145 கோடி நிதி பெறப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு மட்டுமே 10 சதவீதம் நிதி பெறப்பட்டுள்ளது. இதில் கோவையில் உள்ள 9 ஆயிரத்து 997 நிறுவனங்களுக்கு ரூ.761.95 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு எவ்விதப் பிணையும் இல்லாமல் கடன் வழங்குவதற்காகத் தமிழக அரசு சாா்பில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் இதுவரை ரூ.125 கோடி வழங்கப்பட்டுள்ளது. மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி வழங்கப்படுவதாக சட்டப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்குத் தற்போது கடன் வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT