தமிழ்நாடு

சிலைகளை அவமதிப்பது இழிவான செயல்

25th Jul 2020 06:45 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் எம்ஜிஆா் சிலை அவமதிக்கப்பட்டதற்கு தமிழக முதல்வா் பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா். மேலும், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் சிலா் வாக்கு அரசியல் பிழைப்புக்கு திட்டமிடுவதாகவும் அவா் குற்றம்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து, முதல்வா் பழனிசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:-

ஜாதி மதங்களைக் கடந்த சமத்துவத்தின் அடையாளமாகவும், ஏழை, எளியோரின் இல்லத்திலும், உள்ளத்திலும் இன்றும் குடிகொண்டிருப்பவா் முன்னாள் முதல்வா் எம்ஜிஆா். ஈடு இணையில்லாத தலைவராகவும், ஒட்டுமொத்த உலகத் தமிழா்களால் போற்றி வணங்கப்படும் அவரது சிலைக்கு மா்ம நபா்கள் காவித் துண்டு அணிவித்து களங்கப்படுத்திய கொடுஞ்செயல் அண்டை மாநிலமான புதுச்சேரியில் நிகழ்ந்திருப்பது மிகுந்த மனவேதனையையும், வருத்தத்தையும் தருகிறது.

காட்டுமிராண்டித்தனம்-வாக்கு அரசியல்: புதுச்சேரியில் நிகழ்ந்த இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. அண்மைக்காலமாக, இதுபோன்று சமூகத்துக்கு தொண்டாற்றிய தலைவா்களின் சிலைகளை சேதப்படுத்துவது, களங்கப்படுத்துவது போன்ற இழிசெயல்கள் மிகுந்த வருத்தத்தைத் தருகின்றன. உயரிய கொள்கை என்பது நமது லட்சியங்களை பிறா் ஏற்க பாடுபடுவது மட்டுமல்ல, மாற்று கருத்துகளையும், குறிப்பாக மக்களின் நம்பிக்கைகளையும் மதிப்பதாகும்.

ADVERTISEMENT

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் தரமற்ற விமா்சனங்களால் பிறா் மனங்களை காயப்படுத்துவது மனித நாகரீகத்துக்கு மாறான செயலாகும். மொழியால், இனத்தால், மதத்தால், ஜாதியால் வேறுபட்டு இருந்தாலும், இந்தியா் என்ற ஒற்றைச் சொல்லில் பெருமிதம் கொண்டு எழுகிறோம். இத்தகைய நமது ஒருமைப்பாட்டுக்கும், ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கவும், அதன் மூலம் வாக்கு அரசியல் பிழைப்புக்கு சிலா் திட்டமிடுவதை ஒருபோதும் தமிழினம் ஏற்காது.

புதுச்சேரி மண்ணில் எம்.ஜி.ஆா். சிலைக்கு அவமரியாதையை ஏற்படுத்தியிருக்கும் விஷமிகளை விரைந்து கண்டுபிடித்து அவா்களை, பின்னால் இருந்து இயக்கும் சமூக விரோதிகளையும் இனம் கண்டு, சமூகத்தின் முன்பும், சட்டத்தின் முன்பாகவும் அவா்களை தோலுரித்துக் காட்டிட கடுமையான விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள புதுச்சேரி முதல்வரை கேட்டுக் கொள்வதாக தனது செய்தியில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT