தமிழ்நாடு

தாராபுரம் அருகே  விவசாயி தற்கொலை: கடன்களைத் தள்ளுபடி செய்வதாக வங்கி அதிகாரிகள் உறுதி

13th Jul 2020 06:48 PM

ADVERTISEMENT

 

தாராபுரம் அருகே தனியார் வங்கி அதிகாரிகள் கொடுத்த நெருக்கடியால் விவசாயி தற்கொலை செய்து கொண்டதால் அவர் வாங்கிய கடன்களை 15 நாள்களில் தள்ளுபடி செய்வதாக வங்கி அதிகாரிகள் திங்கள்கிழமை உறுதியளித்துள்ளனர்.

தாராபுரம் அருகே உள்ள குழந்தைப்பாளையத்தில் வசித்து வந்தவர் விவசாயி ராஜாமணி(55),இவர் தாராபுரத்தில் உள்ள தனியார் வங்கியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ரூ.11 லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்தக் கடனை சில ஆண்டுகள் செலுத்திய நிலையில் சரிவர செலுத்தமுடியவில்லை. இதையடுத்து, வங்கி நிர்வாகம் அவர் வாங்கிய அசல் மற்றும் வட்டியையும் சேர்த்து 2016 ஆம் ஆண்டில் கடனை ரூ.14 லட்சமாக உயர்த்தி வழங்கினர். 

இதன் பிறகு சிலஆண்டுகளாக கடன் தவணைத் தொகையைச் செலுத்தி வந்த ராஜாமணி விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம், பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களாக கடனை சரிவர செலுத்தவில்லை. இதையடுத்து, தனியார் வங்கி அதிகாரிகள் கடனை திருப்பச் செலுத்தக்கோரி ராஜாமணி மற்றும் அவரது குடும்பத்தினரை தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகத் தெரிகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் ராஜாமணி ஜூலை 4 ஆம் தேதி விஷ மாத்திரையைத் தின்று தற்கொலை செய்து கொண்டார்.

ADVERTISEMENT

இந்த சம்பவத்துக்கு காரணமான வங்கி நிர்வாகத்தை கண்டித்தும், ராஜாமணியின் வங்கிக் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்யக் கோரியும் அனைத்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஜூலை 8ஆம் தேதி வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூலை 13 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாணலாம் என்று காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் தெரிவித்திருந்தனர்.

வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை..

இதன்படி தாராபுரம் வட்டாட்சியர் கனகராஜன், ஏடிஎஸ்பி ஜெயசந்திரன், டிஎஸ்பி ஜெயராம் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்ததை நடைபெற்றது. இதில், விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்குரைஞர் ஈசன், சடையபாளையம் ஊராட்சி திமுக தலைவர் ஈஸ்வரன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் சிவக்குமார், உழவர் உழைப்பாளர் கட்சியின் மாவட்டத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மற்றும் விவசாயச் சங்கங்களின் சார்பு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் பங்கேற்றனர். 

அதே போல், தனியார் வங்கி சார்பில் 5 அதிகாரிகள் பங்கேற்றனர். இதில்,விவசாயி ராஜாமணி வங்கியில் பெற்ற கடன்களை 15 நாள்களில் தள்ளுபடி செய்து அவரது சொத்துப் பத்திரங்களை அவரது குடும்பத்தினரிடம் அளிப்பதாக வங்கி அதிகாரிகள் உறுதியளித்தனர். மேலும், ராஜாமணியின் இறப்புக்கு இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக வங்கியின் உயர் அதிகாரிகளிடம் பேசி முடிவு அறிவிக்கப்படும் என்றனர்.

Tags : suicide
ADVERTISEMENT
ADVERTISEMENT