தமிழ்நாடு

ஸ்ரீவாஞ்சியம் கோயிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

DIN

ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி கோயிலில் கார்த்திகை மாத பத்துநாள் பிரம்மோற்சவக் கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் ஸ்ரீவாஞ்சியம், சமயக்குரவர்கள் திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிறப்பு ஸ்தலம். பிரளய காலத்தில் அனைத்து லோகங்களும் நீரில் அழிந்திருக்க, முழுகாத இடம் ஏதும் உண்டா என பார்வதி, பரமசிவனிடம் கேட்கும்போது, பரமசிவன் ஸ்ரீவாஞ்சியத்தைக் காட்டி அருளினார். இதனால் மகிழ்ந்த பார்வதி, பரமசிவனுடன் சேர்ந்து ஞானசக்தியாகி, வாழவந்த நாயகியாய்த் தோன்றி இங்கு உறைவதாகப் புராண வரலாறுகள் தெரிவிக்கின்றன. 

இவ்வாறு சிறப்புப் பெற்ற இந்த ஸ்தலத்தில் வேறு எங்கும் இல்லாத சிறப்பாக எமதர்மராஜா, சித்திரகுப்தருடன் தனி சன்னதியில் எழுந்தருளி எமபயம், பைரவ உபாதை நீக்கும் ஸ்தலமாக விளங்குகிறது. இந்த ஸ்தலத்தில் கார்த்திகை மாத பத்து நாள் பிரம்மோற்சவ விழாக் கொடியேற்றம் வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. 48 அடி உயரமுள்ள கொடிமரத்திற்கு நடைபெற்றச் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்குப் பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் ரிஷபக் கொடியேற்றப்பட்டது.  

கார்த்திகைப் பிரம்மோற்சவக் கொடியேற்றத்தின் போது சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீவள்ளித் தெய்வானை சமேத ஸ்ரீஷண்முகப் பெருமான்.

இந்நிகழ்ச்சியினைப் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தரிசித்து வழிபட்டனர். ஆண்டுதோறும் கார்த்திகை மாத பிரம்மோற்சவ விழாவில் ஸ்ரீவள்ளித் தெய்வானை சமேத ஸ்ரீஷண்முகப் பெருமான் அபிஷேக ஆராதனைகளுக்குப் பின்னர் தினசரி ஒவ்வொரு வாகனத்தில் அமர்ந்து நான்கு முக்கிய வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆனால் இந்த ஆண்டு கோயிலின் நான்கு பிரகாரத்தில் மட்டும் சுவாமியின் பிரவேசம் நடைபெறும். 

அதேபோல கார்த்திகை பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான கார்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமைக் கார்த்திகை மாத தீர்த்தவாரி நடைபெற்று சுவாமி பக்தர்களுக்கு காட்சி தருவார். அதற்கு முதல் காலைத் தேரோட்டம் நடைபெறும். ஆனால் தற்போது கரோனா காரணமாக, அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகளின்படி தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது டிசம்பர் 13ந் தேதி நடைபெறும் தீர்த்தவாரியின் போது, புண்ணியத் தீர்த்தமான குப்த கங்கையில், பக்தர்கள் நீராட அனுமதி கிடையாது. 

ஆனால் கோயில் நிர்வாகத்தின் சார்பாக, புண்ணியத்தீர்த்தத்தில் மோட்டார் பொருத்தப்பட்டு குழாய் வழியாக பக்தர்கள் மீது நீர் தெளிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருக்கோயில் தக்கார் மற்றும் உதவி ஆனையர் ப.இராணி, செயல் அலுவலர் ம.ஆறுமுகம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். மேலும் கார்த்திகைப் பிரம்மோற்சவ விழாவில் கலந்துகொள்ளும் பக்தர்கள் அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகளைக் கடைபிடித்து முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கோயில் வழிபாட்டில் கலந்து கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT