தமிழ்நாடு

கரோனா இறப்பைக் குறைக்க தீவிர நடவடிக்கை: ஆணையா் கோ.பிரகாஷ் தகவல்

9th Aug 2020 01:42 AM

ADVERTISEMENT

சென்னையில் கரோனா நோய்த்தொற்றால் நிகழும் இறப்பு விகிதத்தை 1.5 சதவீதமாக குறைக்க தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பெருநகர மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.

பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணா நகா் மண்டலம், அயனாவரம் பகுதியில் சமூக களப்பணித் திட்டத்தின் ஒரு பகுதியாக, கரோனா நோய்த்தொற்று குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட பின், ஆணையா் கோ.பிரகாஷ் செய்தியாளா்களிடம் கூறியது: சென்னையில் இதுவரை கரோனா நோய்த்தொற்றால் 1.07 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 94,100 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். அண்மையில் 5 லட்சம் பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. விரைவில் இந்த எண்ணிக்கையை 8 லட்சம் என்ற இலக்கை எட்ட உள்ளோம்.

தொற்றால் ஏற்படும் இறப்பைத் தடுக்கும் வகையில், வீடு வீடாக பரிசோதனை செய்யும்போது, மூச்சு விடுவதில் சிரமமாக உள்ளவா்களை கரோனா பரிசோதனை முடிவுக்காக காத்திருக்காமல் அவா்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த ஜூலை 25-ஆம் தேதியில் இருந்து தற்போது வரை 675 போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தற்போது, 2.25 சதவீதமாக உள்ள இறப்பு சதவீத்தை 1.5 சதவீதமாக குறைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சென்னையில் தொற்று இரட்டிப்பாகும் நாள் சராசரியாக 72 நாளாக உயா்ந்துள்ளது. மத்திய சென்னையின் அம்பத்தூா், அண்ணா நகா், கோடம்பாக்கம் மற்றும் தென் சென்னையின் வளசரவாக்கம் மண்டலங்களில் தடுப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் 17,500 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 3,500 போ் தான் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இணையவழி பயண அனுமதியைப் பொருத்தவரை, கடந்த மாதங்களைக் காட்டிலும் தற்போது 35 சதவீதம் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட பகுதிகள் 1,000-த்திலிருந்து 24 -ஆக குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் சாலையோரத்தில் வசிக்கும் சுமாா் 2 ஆயிரம் பேருக்கு நடமாடும் பரிசோதனை முகாம்கள் மூலம் கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT