தமிழ்நாடு

உதகை சிறப்பு மலை ரயில்: அக்.5 முதல் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

22nd Sep 2019 12:51 AM

ADVERTISEMENT

மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு செல்லும் சிறப்பு மலை ரயிலை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து தென்னக ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினமும் காலை 7.10 மணிக்கு மலை ரயில் இயக்கப்படுகிறது. இதில் பயணிக்க உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக அதிகாலை 4 மணியில் இருந்தே சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 
இந்த ரயிலிலுள்ள 4 பெட்டிகளில் 150 பயணிகள் பயணம் செய்ய முடியும். தினமும் ஒரு மலை ரயில் மட்டுமே இயக்கப்படுவதால், இதில் பயணிக்க முன்பதிவு செய்து சுற்றுலாப் பயணிகள் பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. 
நீலகிரி மாவட்டத்தில் சீசன் காலத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிக அளவில் உள்ளதால், மலை ரயிலில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. எனவே, கூடுதல் மலை ரயில் இயக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திடம் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்திருந்தனர். 
இதையொட்டி, தென்னக ரயில்வே நிர்வாகம் சார்பில், கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி சனிக்கிழமை முதல் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு உதகைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. மீண்டும் இதே ரயில் உதகை ரயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்குப் புறப்பட்டு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்துக்கு மாலை 4.20 மணிக்கு வந்தடையும். தற்போது இந்த சிறப்பு ரயிலின் சேவை வரும் செப்டம்பர் 29 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 
இந்நிலையில், உதகையில் 2-ஆவது சீசன் தொடங்க உள்ளதையொட்டி, தெற்கு ரயில்வே நிர்வாகம் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மீண்டும் சிறப்பு ரயிலை வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் டிசம்பர் 28- ஆம் தேதி வரை 3 மாதங்களுக்கு இயக்க உள்ளது.  இந்த ரயில், வாரந்தோறும் மேட்டுப்பாளையத்தில் இருந்து  உதகைக்கு சனிக்கிழமையும், உதகையில் இருந்து  மேட்டுப்பாளையத்துக்கு ஞாயிற்றுக்கிழமையும் மட்டுமே இயக்கப்படும். இதற்கான முன்பதிவு சனிக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT