தமிழ்நாடு

பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகை: தலைமைச் செயலர், டிஜிபி ஆய்வு

22nd Sep 2019 04:34 AM

ADVERTISEMENT

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் வரும் அக்டோபர் 11-இல் வருகை தருவதை முன்னிட்டு மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமைச் செயலர் கே.சண்முகம்  காவல்துறை டிஜிபி ஜே.கே.திரிபாதி ஆகியோர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர். 
சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் அக்டோபர் 11-இல் வருகை தருகின்றனர். இங்குள்ள நட்சத்திர  விடுதியில் 2 நாள் தங்குகின்றனர்.  
இதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்பு மிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம், வர்த்தகம் தொடர்பான முக்கிய கோப்புகளில்  கையெழுத்திடுகின்றனர். 
இதனையொட்டி, மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 
ஏற்கெனவே, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாமல்லபுரத்துக்கு வியாழக்கிழமை வந்து சென்றனர். 
இதையடுத்து, மத்திய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரி எஸ்.எஸ்.ஷோஹனுடன், சீனாவில் இருந்து வெளியுறவுத் துறை, பாதுகாப்புத்துறை மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் 50 பேர் கொண்ட குழுவினர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.  
இந்நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தமிழக தலைமைச் செயலர் கே.சண்முகம், காவல்துறைத் தலைவர் ஜே.கே.திரிபாதி உள்ளிட்டோர் சனிக்கிழமை மாமல்லபுரம்  வந்தனர். 
அப்போது, அர்ச்சுனன் தபசு சிற்பம் அருகில் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புக் கடைகளை உடனடியாக அப்புறப்படுத்தவேண்டும் என்று வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். 
அதேபோல் கடற்கரைச் சாலை, ஐந்துரதம் செல்லும் சாலையோர ஆக்கிரமிப்புகளையும் அகற்றவும், கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். 
ஆய்வின்போது, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், தொல்லியல் துறை கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் , மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, செங்கல்பட்டு கோட்டாட்சியர் செல்வம், காவல் உதவி கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், காவல் ஆய்வாளர் ரவிக்குமார், சுற்றுலாத்துறை அலுவலர் சக்திவேல், பேரூராட்சி நிர்வாக அதிகாரி லதா, திருக்கழுகுன்றம் வட்டாட்சியர் தங்கராஜ், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT