தமிழ்நாடு

அண்ணா பல்கலை.க்கு நிதி: மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

22nd Sep 2019 03:34 AM

ADVERTISEMENT

 

உயர்புகழ் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக அண்ணா பல்கலைக்கழகத்தை அறிவித்து மாற்றுவதற்குத் தேவையான நிதியை மத்திய அரசே வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: உலகின் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இந்திய கல்வி நிறுவனங்கள் ஒன்று கூட இடம்பெறாத நிலையில், அவற்றில் இந்திய பல்கலைக்கழகங்களை இடம்பெறச் செய்யும் நோக்கத்துடன் 10 அரசு கல்வி நிறுவனங்கள், 10 தனியார் கல்வி நிறுவனங்கள்  என மொத்தம் 20 பல்கலைக்கழகங்களை உயர்புகழ் கல்வி நிறுவனங்களாக மத்திய அரசு அறிவிக்க உள்ளது. 
10 அரசு கல்வி நிறுவனங்களில் தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகம், மேற்கு வங்கத்தின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் ஆகியவை மட்டும் தான் மாநிலப் பல்கலைக்கழகங்கள் ஆகும். உயர்புகழ் கல்வி நிறுவனத் தகுதியை பெறுவதற்காக கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட ஏராளமான பணிகளை பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டியிருக்கும். இதற்காக ஒவ்வொரு பல்கலைக்கழகமும்  அதிகபட்சமாக ரூ.3 ஆயிரம் கோடி வரை செலவிட வேண்டியிருக்கும் என உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
உயர்புகழ் நிறுவனங்களாக அறிவிக்கப்படவுள்ள 10 அரசு கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி உள்ளிட்ட 8 நிறுவனங்கள் மத்தியப் பல்கலைக்கழகங்கள் என்பதால், அவற்றுக்கான செலவை மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும். ஆனால், அண்ணா பல்கலைக்கழகம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் ஆகிய மாநில பல்கலைக்கழகங்களுக்கு ஆகும் செலவில் பெரும்பகுதியை மாநில அரசுகளே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருப்பது தான் பெரும் முட்டுக்கட்டையை ஏற்படுத்தியிருக்கிறது. 
பல்கலைக்கழகங்களை தரம் உயர்த்துவதற்காக ஆகும் செலவில் 50 சதவீதம் அல்லது ரூ.1,000 கோடியில் எது குறைவோ, அதை மட்டும் தான் மத்திய அரசு வழங்கும். அண்ணா பல்கலைக்கழகத்தை மேம்படுத்த  ரூ.2,750 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டிருப்பதால், மத்திய அரசு வழங்கும் ரூ.1,000 கோடி தவிர மீதமுள்ள ரூ.1,750 கோடியை 5 ஆண்டுகளில் அண்ணா பல்கலை திரட்ட வேண்டும். இது சாத்தியமல்ல. அண்ணா பல்கலைக்கழகத்துக்குத் தேவைப்படும் ரூ.1,750 கோடியை தமிழக அரசு வழங்குவதற்கான வாய்ப்புகளும் மிகவும் குறைவு. எனவே, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை உயர்புகழ் கல்வி நிறுவனமாக அறிவித்து மாற்றுவதற்கான முழு நிதியையும் மத்திய அரசே வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT