டி20 உலகக் கோப்பை

மண்டியிடாதது ஏன்?: மெளனம் கலைத்தார் டி காக்

28th Oct 2021 03:38 PM

ADVERTISEMENT

 

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் கட்டளையை ஏற்காமல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடாதது பற்றி விளக்கம் அளித்துள்ளார் பிரபல வீரர் குயிண்டன் டி காக். 

கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்கு தனது ஆதரவைத் தெரிவிக்க மறுத்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் பிரபல வீரர் டி காக் விலகினார். இதனால் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது. 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் பவுமா, சொந்தக் காரணங்களுக்காக டி காக் விளையாடவில்லை என அறிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

ADVERTISEMENT

முக்கியமான கிரிக்கெட் ஆட்டங்களில் கிரிக்கெட் வீரர்கள் சில நொடிகள் மண்டியிட்டு கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் என்கிற இயக்கத்துக்குத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகிறார்கள். டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் இந்திய அணி உள்பட பல அணிகள் ஆடுகளத்தில் சில நொடிகள் மண்டியிட்டும் வேறு விதங்களிலும் கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்குத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதேபோல மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரேவிதமாக அனைத்து வீரர்களும் சில நொடிகள் மண்டியிட்டு கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கட்டளையிட்டது. அனைத்து ஆட்டங்களிலும் வீரர்கள் ஒற்றுமையுடன் இதைச் செய்யவேண்டும் எனக் கூறியிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி காக் அந்த ஆட்டத்திலிருந்து விலகினார். 

இதனால் கடும் விமர்சனத்துக்கு ஆளானார் டி காக். சில நாள்கள் மெளனத்துக்குப் பிறகு தனது விளக்கத்தை அவர் தெரிவித்துள்ளார். அறிக்கையில் டி காக் கூறியதாவது:

என்னுடைய அணியினரிடமும் என் நாட்டு ரசிகர்களிடமும் மன்னிப்பு கோருகிறேன். 

இதை ஒரு பிரச்னையாக்கவேண்டும் என நான் முயலவில்லை. இனப்பாகுபாடுக்கு எதிராகச் செயல்படுவதன் முக்கியத்துவத்தை உணர்கிறேன். ஒரு வீரராக நான் எந்த விதத்தில் முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என்பதையும் உணர்கிறேன். இனப்பாகுபாடுக்கு எதிரான நடவடிக்கையாக மண்டிடுவதன் மூலம் மற்றவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும் என்றால் அதை மகிழ்ச்சியுடன் செய்ய விரும்புகிறேன். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நான் விளையாடாததால் யாரையும் அவமதிக்க விரும்பவில்லை. 

என்னுடைய குடும்பத்திலும் பல்வேறு இனத்தவர்கள் உள்ளார்கள். என் சகோதரிகள் கலப்பினத்தைச் சேர்ந்தவர்கள். என் வளர்ப்புத் தாய் கருப்பினத்தவர். எனவே நான் பிறந்ததிலிருந்தே, கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் என்பதை அறிந்தவன். சர்வதேச இயக்கத்துக்காக அதை அறிந்தவன் அல்லன். தனி மனிதனை விடவும் அனைத்து மக்களுக்கு சம உரிமை முக்கியமானது. நம் அனைவருக்கும் உரிமை உண்டு, அவை முக்கியம் என்று சொல்லிக்கொடுக்கப்பட்டு வளர்ந்தவன். நாங்கள் என்ன செய்யவேண்டும் எனக் கட்டளை பிறப்பிக்கும்போது என் உரிமையை இழந்தவனாக ஆனேன். 

கிரிக்கெட் வாரியத்துடன் நேற்று உணர்வுபூர்வமான விவாதம் நடைபெற்றது. அவர்களுடைய நோக்கம் பற்றிய புரிதல் அனைவருக்கும் உண்டு. இந்த விவாதம் முன்பே நடைபெற்றிருக்கலாம். ஆட்ட நாளன்று நடந்ததைத் தவிர்த்திருக்கலாம். நான் முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என்பதை ஏற்கிறேன். இதற்கு முன்பு, அவரவர் விருப்பப்படி நடந்துகொள்ளலாம் என்றார்கள். என்னுடைய எண்ணங்களை எனக்குள் வைத்துக்கொண்டேன். 

என்னுடைய தினசரி வாழ்க்கையில் அனைவரையும் நேசித்து வாழும் நான் எதற்காக சைகையின் மூலம் என் உணர்வை வெளிப்படுத்த வேண்டும்? இது எனக்குப் புரியவில்லை. எந்த ஒரு விவாதமும் இன்றி என்ன செய்யவேண்டும் என்று சொல்லும்போது அதன் அர்த்தத்தை இழப்பதாக எண்ணினேன். இனவெறியாளராக நான் இருந்திருந்தால் மண்டியிட்டு பொய்யாக நடந்துகொண்டிருக்க முடியும். அது தவறு. அது நல்ல சமூகத்தைக் கட்டமைக்காது. 

என்னுடன் வளர்ந்தவர்கள், விளையாடியவர்களுக்குத் தெரியும், நான் எப்படிப்பட்டவன்  என்று. முட்டாள், சுயநலக்காரர் என ஒரு கிரிக்கெட் வீரராக பல்வேறு விதமாக என்னை விமர்சித்துள்ளார்கள். அதெல்லாம் என்னைக் காயப்படுத்தியதில்லை. ஆனால் தவறான புரிதலால் இனவெறியாளர் எனும்போது அது என்னை மிகவும் காயப்படுத்துகிறது. என் குடும்பத்தையும் கர்ப்பமாக உள்ள என் மனைவியையும் காயப்படுத்தியுள்ளது. நான் இனவெறியாளன் அல்லன். என் மனத்துக்கு அது தெரியும். 

முக்கியமான ஆட்டத்தில் விளையாடச் செல்லும்போது நாங்கள் பின்பற்றவேண்டிய கட்டளைகள் சொல்லப்பட்டதால் அதிர்ச்சியடைந்தேன். பயிற்சி முகாம்கள், வலைப்பயிற்சிகள், ஜூம் கூட்டங்கள் என அனைத்தின் வழியாகவும் நம்முடைய நிலைப்பாடு தெரியும். என் அணி வீரர்களை விரும்புகிறேன். நாட்டுக்காக விளையாடுவதை விடவும் வேறு மகிழ்ச்சி எனக்கு இல்லை. போட்டி தொடங்குவதற்கு முன்பே இதைச் சரி செய்திருக்க வேண்டும். இதனால் நாட்டுக்கு வெற்றி தேடித்தரவேண்டிய பணியில் கவனம் செலுத்தியிருப்போம். நாங்கள் எப்போது உலகக் கோப்பைப் போட்டிக்குச் சென்றாலும் பரபரப்பு ஏற்படுகிறது. இது நியாயமில்லை. எனக்கு ஆதரவு அளிக்கும் அணி வீரர்களுக்கும் கேப்டனுக்கும் நன்றி. மக்கள் கவனித்திருக்க மாட்டார்கள். பவுமா அற்புதமான தலைவர் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT