டி20 உலகக் கோப்பை

சரிவிலிருந்து மீட்ட கோலி, பந்த்: பாகிஸ்தானுக்கு 152 ரன்கள் இலக்கு

24th Oct 2021 09:22 PM

ADVERTISEMENT


பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.

டி20 உலகக் கோப்பையின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

ஷஹீன் அப்ரிடி, ஹசன் அலி வேகத்தில் இந்திய அணி திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தி பவர் பிளேவில் 3 விக்கெட்டுகளை இழந்தது. 6 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 36 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இதையும் படிக்கபாகிஸ்தான் மிரட்டலில் திணறும் இந்தியா: காப்பாற்றுவாரா கோலி?

விராட் கோலியுடன் இணைந்த ரிஷப் பந்த் பாட்னர்ஷிப் அமைத்து ரன் ரேட்டை உயர்த்தினார். கோலி விக்கெட்டைத் தக்கவைக்க, பந்த் தொடக்கத்தில் நிதானம் காட்டி பின்னர் அதிரடிக்கு மாறினார். இதனால், அணியின் ஸ்கோர் படிப்படியாக உயர்ந்தது.

ADVERTISEMENT

ஹசன் அலி ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை ஒற்றைக் கையில் பறக்கவிட்டு மைதானத்தை அதிரவைத்தார்.

ஆனால், முக்கியமான கட்டத்தில் அவர் 39 ரன்களுக்கு ஷதாப் கான் சுழலில் அவரிடமே கேட்ச் ஆனார்.

இதன்பிறகு, மீண்டும் ரன் ரேட் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டது. கோலியும், ஜடேஜாவும் பாட்னர்ஷிப் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. 

இன்னிங்ஸின் கடைசி கட்டத்தை எட்டிய நிலையில் ஹசன் அலி ஓவரில் அதிரடி காட்ட கோலியும், ஜடேஜாவும் முனைப்பு காட்டினர். அவர் வீசிய 16-வது ஓவரில் கோலி 2 பவுண்டரிகள் விளாசி அசத்தினார்.

ஆனால், ஹாரிஸ் ரௌஃப் 17-வது ஓவரில் 4 ரன்களை மட்டுமே கொடுத்து ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினார். ஹசன் அலி வீசிய 18-வது ஓவரில் அரைசதத்தை எட்டிய கோலி ஒரு பவுண்டரி அடிக்க ஜடேஜாவும் ஒரு பவுண்டரி விளாசினார். இதனால், மீண்டும் ஹசன் அலி ஓவர் பெரிய ஓவராக மாறியது. ஆனால், அடுத்த பந்திலேயே ஜடேஜா 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

19-வது ஓவரை அப்ரிடி வீசினார். முதல் 3 பந்துகளில் ஹார்திக் பாண்டியாவைத் திணறடித்த அவர், 4-வது பந்தில் கோலியை வீழ்த்தி மீண்டும் அசத்தினார். கோலி 49 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார்.

விக்கெட் விழுந்தாலும், அந்த ஓவரும் இந்திய அணிக்கு பெரிய ஓவராக மாறியது. கடைசி பந்தை பாண்டியா பவுண்டரிக்கு விரட்டினார். அது நோ-பாலாக போக கடைசி பந்தை மீண்டும் வீச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. 1 ரன் மட்டுமே கிடைக்க வேண்டிய அந்த பந்தில் அப்ரிடி அவசியமில்லாமல் 'த்ரோ' வீச இந்திய அணிக்கு 1 ரன் மட்டுமில்லாமல் கூடுதலாக 4 ரன்கள் கிடைத்தன.

எனினும், ரௌஃப் வீசிய கடைசி ஓவரில் பாண்டியா 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எனினும், புவனேஷ்வர் குமார் மற்றும் முகமது ஷமி கடைசி 3 பந்துகளில் 5 ரன்கள் சேர்க்க இந்திய அணி 150 ரன்களைத் தாண்டியது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.

Tags : Ind vs Pak
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT