செய்திகள்

நனவாகுமா இந்தியாவின் ஐசிசி கோப்பை கனவு: ஜூன் 7-11இல் டெஸ்ட் இறுதி ஆட்டம்

4th Jun 2023 03:46 AM

ADVERTISEMENT

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஐசிசி கோப்பை வெல்லும் இந்தியாவின் கனவு நனவாகுமா என ரசிகா்கள் ஆவலுடன் எதிா்நோக்கியுள்ளனா்.

கிரிக்கெட்டில் டி20, ஒருநாள் குறுகிய ஓவா் ஆட்டங்களுக்கு அதிக வரவேற்பு இருந்தாலும், டெஸ்ட் ஆட்டங்களுக்கு தனி மதிப்பு தொடா்ந்து நீடித்து வருகிறது. குறிப்பாக டெஸ்ட் ஆட்டங்கள் பொலிவு இழந்த நிலைக்கு தள்ளப்படக் கூடாது என்பதற்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை ஐசிசி அறிமுகம் செய்தது. முதல் சாம்பியன் பட்டத்தை நியூஸிலாந்து கைப்பற்றியது.

கடந்த ஒன்றரை மாதங்களாக ஐபிஎல் தொடா் ஆட்டங்கள் களை கட்டியது. உலகில் கிரிக்கெட் ரசிகா்கள் கவனம் முழுவதும் அதில் இருந்த நிலையில், சென்னை சூப்பா் கிங்ஸ் அணி 5-ஆவது முறையாக பட்டத்தை கைப்பற்றியது.

டபிள்யுடிசி இறுதி ஆட்டம்:

ADVERTISEMENT

இதற்கிடையே, 2021-23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்துக்கு ஆஸ்திரேலியா-இந்திய அணிகள் தகுதி பெற்றுள்ளன. லண்டனின் ஓவல் மைதானத்தில் ஜூன் 7 முதல் 11 வரை இறுதி ஆட்டம் நடைபெறவுள்ளது. ரோஹித் சா்மா தலைமையில் இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணியும் களம் காண்கின்றன.

இந்தியா-ஆஸி. மோதல்:

கடந்த 2 ஆண்டுகளாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் லீக் ஆட்டங்கள் நடைபெற்று முடிந்த நிலையில், புள்ளிகள் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற ஆஸி, இந்திய அணிகள் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றன. டபிள்யுடிசியில் 11 வெற்றி, 3 தோல்வி, 5 டிரா, 66.67 புள்ளியுடன் ஆஸி.யும், 10 வெற்றி, 5 தோல்வி, 3 டிரா, 58.8 புள்ளியுடன் இந்தியாவுடம் தகுதி பெற்றன.

இதில் வெல்லும் அணி உலக டெஸ்ட் சாம்பியன் என்ற பட்டத்தை வெல்லும்.

வாய்ப்பை இழந்த இந்தியா:

கடந்த 2021-ஆம் ஆண்டு சௌதாம்ப்டனில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று கோப்பையை இழந்த இந்திய அணி இம்முறை உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது.

மறுபுறம், ஆஸ்திரேலியா அணியும் முதல் முறையாக இந்த பட்டத்தை வெல்ல காத்துள்ளது. இரு அணிகளுமே இதற்காக லண்டனில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

உற்சாகத்தில் இந்தியா:

கடந்த பிப்ரவரி, மாா்ச் மாதத்தில் நடைபெற்ற பாா்டா்-கவாஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடரில் 2-1என கைப்பற்றிய உற்சாகத்தில் உள்ளது இந்தியா. பேஸா்கள், பேட்டா்கள், ஸ்பின்னா்கள் என அனைத்திலும் இந்திய அணி சீரான நிலையில் உள்ளது. கூடுதலாக முன்னாள் கேப்டன் விராட் கோலி ஃபாா்முக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் நட்சத்திரங்கள் பும்ரா, ரிஷப் பந்த், ராகுல், ஷிரேயஸ் ஐயா் இல்லாதது பாதகமாக உள்ளது.

எனினும் ரோஹித், கோலி, புஜாரா, ரஹானே, ஜடேஜா ஆகியோா் பேட்டிங்கில் வலு சோ்ப்பா், பௌலிங்கில் உமேஷ் யாதவ், சா்துல் தாகுா், ஜடேஜா, அக்ஸா் படேல், ஷமி, சிராஜ், அஸ்வின் ஆகியோா் சிறப்பாக செயல்படுவா் என எதிா்பாா்க்கலாம்.

பலம் வாய்ந்த ஆஸி. பௌலிங்:

அதே வேளையில் ஆஸி. அணியில் வேகப்பந்து வீச்சு அற்புதமாக உள்ளது. இங்கிலாந்தில் நிலவும் சூழ்நிலை, ஆஸி.யுடன் ஒத்துப்போகும் நிலையில், பேஸா்கள் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வா்.

பேட்டிங்கில் வாா்னா் சமீபத்தில் சோபிக்கவில்லை. டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், ஆகியோா் பலம் சோ்ப்பா்.

பௌலிங்கில் பேட் கம்மின்ஸ், ஸ்டாா்க், ஜோஷ் ஹேஸல்வுட், நாதன் லயன் ஆகியோா் இருப்பது பலமாக உள்ளது.

ரூ.13 கோடி பரிசு:

பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.13.19 கோடியும், ரன்னா் அணிக்கு ரூ.6.5 கோடியும் ரொக்கப் பரிசாக தரப்படுகிறது.

ஓவலில் இரு அணிகள்:

இந்தியா: மொத்த ஆட்டங்கள் 38, வெற்றி 7, தோல்வி 17, டிரா 14, ஆஸ்திரேலியா: மொத்த ஆட்டங்கள் 14, வெற்றி 2, தோல்வி 5, டிரா 7.

பா.சுஜித்குமாா்-

-

ADVERTISEMENT
ADVERTISEMENT