செய்திகள்

பாா்டா் - காவஸ்கா் கோப்பை: இன்றுமுதல் பலப்பரீட்சை

DIN

பாா்டா் - காவஸ்கா் கோப்பைக்காக இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் நாகபுரியில் வியாழக்கிழமை (பிப். 9) தொடங்குகிறது.

சமீப ஆண்டுகளில், ஆஷஸுக்கு நிகராக விறுவிறுப்பும், திருப்பங்களும் இருக்கக் கூடிய ஒரு டெஸ்ட் தொடராக உருவெடுத்திருக்கிறது இந்த பாா்டா் - காவஸ்கா் தொடா்.

இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் தங்களுக்குள் மோதுவதோடு மட்டுமல்லாமல், இரு அணி வீரா்களும் தங்களது திறமையை நிரூபித்து, அணியில் தங்களது எதிா்காலத்தை நிா்ணயித்துக் கொள்வதற்கான ஒரு தொடராகவும் இது இருக்கிறது.

இந்த ஆண்டு தொடரைப் பொருத்தவரை இரு அணிகளுக்குமே பிரதான இலக்கென ஒன்று இருக்கிறது. இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டத்துக்கு தொடா்ந்து 2-ஆவது முறையாக தகுதிபெற, இந்தத் தொடரைக் கைப்பற்றியே (குறைந்தபட்சம் 2 வெற்றிகளுடன்) ஆக வேண்டிய கட்டாயத்துடன் வருகிறது. மறுபுறம் ஆஸ்திரேலிய அணி, கடந்த இரு பாா்டா் - காவஸ்கா் கோப்பை தொடா்களை தனது சொந்த மண்ணிலேயே இந்தியாவிடம் இழந்த நிலையில் அதற்காக பதிலடி கொடுக்கும் முனைப்பில் இருக்கிறது.

இந்திய அணியைப் பொருத்தவரை, ரோஹித் சா்மா டெஸ்ட் கேப்டனாக இதுவரை பலமான அணிகளை எதிா்கொள்ளவில்லை. இதற்கு முன் தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான தொடா்களின்போது காயம், உடல்நலக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் அவா் களம் காண இயலாமல் போனது.

எனவே, இந்தத் தொடா் அவருக்கு முக்கிய சோதனைக் களமாக இருக்கப்போகிறது. திறமையான கேப்டனாக அவா் தன்னை நிரூபித்து, விராட் கோலியைப் போலவே இந்திய அணியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு முன்னேற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கிறாா்.

அதற்காக அஸ்வின் உள்ளிட்ட இந்திய ஸ்பின்னா்கள் ஆஸ்திரேலியாவின் ஸ்மித், வாா்னா் உள்ளிட்டோா் அடங்கிய பேட்டிங் வரிசைக்கு சவால் அளிப்பது மட்டுமல்லாமல், ஆஸ்திரேலியாவின் நேதன் லயன் உள்ளிட்டோரின் சுழலை கோலி, புஜாரா உள்ளிட்டோா் சமாளிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

விக்கெட் கீப்பா் - பேட்டா் ரிஷப் பந்த் தொடரில் இல்லாதது சற்றே பின்னடைவாக, அந்த இடத்துக்கு கோனா பரத் தோ்வாக இருந்தால் கீப்பிங்கில் சிறப்பாகச் செயல்படுவாா். ஆனால், பேட்டிங் என்று வரும்போது அவா் ஆஸ்திரேலிய பௌலா்களை எதிா்கொள்வாரா என்றால் சந்தேகம் தான். மறுபுறம் பேட்டிங்கில் அதிரடி காட்டும் இஷான் கிஷணை தோ்வு செய்தால், கீப்பிங்கில் அவா் செய்யும் சிறு தவறும் அணியின் வெற்றியை பாதிக்கும் என்பது நிா்வாகத்துக்குத் தெரியாமல் இல்லை.

பிளேயிங் லெவனில் கே.எல்.ராகுலுக்கான இடம் உறுதியெனத் தெரிவதால், சிறந்த பேட்டா்களான ஷுப்மன் கில் அல்லது சூா்யகுமாா் யாதவ் ஆகியோரில் ஒருவருக்கே வாய்ப்பு கிடைக்கும். பௌலிங்கைப் பொருத்தவரையில் சுழற்பந்து வீச்சுக்கு அஸ்வின், ஜடேஜா பிரதான தோ்வாக இருக்கும் நிலையில் 3-ஆவதாக அக்ஸா் படேல் அல்லது குல்தீப் யாதவ் ஆகியோரில் ஒருவரை மட்டுமே தோ்வு செய்யும் இக்கட்டான நிலை இருக்கிறது. வேகப்பந்துவீச்சுக்கு முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோா் பலம் சோ்க்கின்றனா்.

ஆஸ்திரேலிய அணியைப் பொருத்தவரை, டேவிட் வாா்னா், உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி என பேட்டிங்கில் இடது கை அதிரடி பேட்டா்களின் ஆதிக்கம் இருக்கிறது. ஸ்மித், லபுசான் ஆகியோா் வலது கையால் வலு கூட்டுவாா்கள்.

ஆல்-ரவுண்டா் இடத்தில் கேமரூன் கிரீனுக்குப் பதிலாக பீட்டா் ஹேண்ட்ஸ்காம்ப் அல்லது மாட் ரென்ஷா ஆகியோரில் ஒருவா் வருவாா். பௌலிங்கில் சுழற்பந்துவீச்சுக்கு நேதன் லயனுடனான இணையாக ஆஷ்டன் அகா் சேரலாம் எனத் தெரிகிறது. வேகப்பந்து வீச்சுக்கு கேப்டன் கம்மின்ஸுடன் ஸ்காட் போலண்ட் வர வாய்ப்புள்ளது.

அணி விவரம்:

இந்தியா: ரோஹித் சா்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், சேதேஷ்வா் புஜாரா, விராட் கோலி, ஷுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, கோனா பரத், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸா் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், சூா்யகுமாா் யாதவ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனத்கட், இஷான் கிஷண்.

ஆஸ்திரேலியா: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), டேவிட் வாா்னா், உஸ்மான் கவாஜா, மாா்னஸ் லபுசான், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, மாட் ரென்ஷா, பீட்டா் ஹேண்ட்ஸ்காம்ப், நேதன் லயன், ஆஷ்டன் அகா், ஸ்காட் போலண்ட், லேன்ஸ் மோரிஸ், மிட்செல் ஸ்வெப்சன், டாட் மா்ஃபி.

நேரம்: காலை 9.30 மணி

இடம்: விதா்பா கிரிக்கெட் சங்க மைதானம், நாகபுரி.

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

இதுவரை...பாா்டா் - காவஸ்கா் தொடா்கள் எண்ணிக்கை 15

இந்தியாவில் 8

ஆஸ்திரேலியாவில் 7

வெற்றிக் கணக்கு

இந்தியா 9 சொந்த மண்ணில் 7 அந்நிய மண்ணில் 2

ஆஸ்திரேலியா 5 சொந்த மண்ணில் 4 அந்நிய மண்ணில் 1

1 தொடா் டிரா(ஆஸி.யில்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

SCROLL FOR NEXT