செய்திகள்

ட்விட்டரில் கொஞ்சிக்கொண்ட ஜடேஜா - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!

30th Sep 2022 02:22 PM

ADVERTISEMENT

 

ட்விட்டர் தளத்தில் ஜடேஜாவும் சஞ்சய் மஞ்ச்ரேக்கரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக ட்வீட்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார்கள்.

சமீபத்தில் முடிந்த ஆசியக் கோப்பைப் போட்டியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளராகப் பணியாற்றிய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஜடேஜாவைப் பேட்டியெடுத்தார். அப்போது முதல் கேள்வியே, என்னிடம் பேச உங்களுக்குச் சம்மதம் தானே என்று ஜடேஜாவிடம் கேட்டார் மஞ்ச்ரேக்கர். ஜடேஜாவும் சிரித்துக்கொண்டே, ஆமாம். பேசலாம் என்றார். இதற்கு முன்பு ஜடேஜாவின் ஆல்ரவுண்டர் திறமைகள் குறித்து கேள்வியெழுப்பியிருந்தார் மஞ்ச்ரேக்கர். ஜடேஜாவும் இதற்குப் பதிலடி தந்தார். இதனால் இருவருக்கும் இடையில் ஒரு மோதல் நிலவி வந்த நிலையில் தற்போது இருவரும் சமாதானம் ஆகியிருப்பது இந்தப் பேட்டியின் மூலம் தெரியவந்தது.  

இந்நிலையில் ட்விட்டர் தளத்தின் மூலமாக மீண்டும் இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாகப் பேசியுள்ளார்கள். தொலைக்காட்சியில் மஞ்ச்ரேக்கர் வர்ணனை செய்யும் காணொளியைப் பகிர்ந்து என்னுடைய நண்பரைத் திரையில் பார்க்கிறேன் என்று ட்வீட் செய்திருந்தார் ஜடேஜா.  இதற்குப் பதிலளித்த மஞ்ச்ரேக்கர், ஹா...ஹா... உங்களை விரைவில் ஆடுகளத்தில் பார்க்க வேண்டும் என்று கூறினார். அதற்கு ஜடேஜா, ஹாஹாஹா... விரைவில் என்று பதிலளித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு மோதிக்கொண்ட இருவரும் தற்போது மீண்டும் நண்பர்களாக, ஒருவருக்கொருவர் நட்புணர்வுடன் பேசிக்கொள்வதற்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். 

ADVERTISEMENT

காயம் காரணமாக ஆசியக் கோப்பைப் போட்டியிலிருந்து ஆல்ரவுண்டர் ஜடேஜா விலகினார். முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாகப் பிறகு அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். இதனால் அவரால் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியிலும் இடம்பெற முடியாமல் போனது. இந்திய அணியின் முக்கிய வீரராக ஜடேஜா உள்ளதால் அவர் அணியில் இல்லாதது இந்திய அணிக்குப் பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT