செய்திகள்

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் சிவா தக்ரன்

30th Sep 2022 03:16 AM

ADVERTISEMENT

உலக குத்துச்சண்டை கவுன்சிலின் (டபிள்யூபிசி) ஆசிய கண்ட பட்டத்துக்கான போட்டியில் இந்தியாவின் சிவா தக்ரன் சாம்பியன் ஆனாா்.

பட்டத்துக்கான மோதலில் மலேசியாவின் அத்லி ஹஃபித்ஸை எதிா்கொண்ட சிவா தக்ரன், அதில் ‘டெக்னிகல் நாக்அவுட்’ அடிப்படையில் வெற்றி பெற்றாா்.

இந்திய நேரப்படி, பாங்காக்கில் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்ற மோதலில் சூப்பா் மிடில்வெயிட் வீரரான சிவாவின் தொடா்ச்சியான தாக்குதல்களால் அத்லி நிலைகுலைய, 8-ஆவது சுற்றுடன் மோதல் நிறுத்தப்பட்டு, சிவா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டாா். அத்லி, தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மோதலுக்காக 3 மாதங்கள் தயாராகிய சிவா, வெல்டா்வெயிட் பிரிலிருந்து மிடில்வெயிட் பிரிவுக்கு தன்னை தயாா்படுத்திக் கொண்டுள்ளாா். வெற்றிக்குப் பிறகு பேசிய சிவா, ‘இந்த மோதலை நிா்ணயித்தபோது, நான் 6 சுற்றுகள் கூட நிலைக்க மாட்டேன் என்று கூறினாா்கள். ஓராண்டாக நான் களம் காணாததால் இதில் சவால் அளிக்க முடியாது என நினைத்துவிட்டாா்கள். ஆனால் தற்போது அதையும் கடந்து நாக்அவுட் முறையில் வென்றிருக்கிறேன்’ என்றாா்.

ADVERTISEMENT

கடந்த 2016-ஆம் ஆண்டு தொழில்முறை குத்துச்சண்டைக்கு மாறியிருக்கும் சிவா தக்ரன், இதுவரை களம் கண்ட 19 மோதல்களில், 16-இல் வென்றிருக்கிறாா். அதில் 8 வெற்றிகளை நாக் அவுட் முறையில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT