செய்திகள்

மெஸ்ஸிக்கு 100-ஆவது சர்வதேச வெற்றி

29th Sep 2022 05:00 AM

ADVERTISEMENT

ஜமைக்காவுக்கு எதிரான நட்பு கால்பந்து ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டீனா வென்றது. இதில் 2 கோல்கள் அடித்த கேப்டன் மெஸ்ஸிக்கு 100-ஆவது சர்வதேச வெற்றியாகவும் அமைந்தது.
 கத்தாரில் நடைபெறவுள்ள பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தயாராகும் வகையில் பல்வேறு நாடுகள் நட்பு ஆட்டங்களில் ஆடி வருகின்றன. நியூ ஜெர்ஸியில் செவ்வாய்க்கிழமை இரவு ஜமைக்காவுடன் நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியன் ஆர்ஜென்டீனா மோதியது. முதலில் 56-ஆவது நிமிஷத்தில் லாட்ரோ மார்ட்டினஸ் முதல் கோலை அடித்தார்.
 பின்னர் 86-ஆவது நிமிஷத்தில் மெஸ்ஸி தனது முதல் கோலை அடித்தார். தொடர்ந்து ப்ரீ கிக் வாய்ப்பின் மூலம் இரண்டாவது மற்றும் வெற்றி கோலை அடித்தார் மெஸ்ஸி.
 100-ஆவது சர்வதேச வெற்றி: கேப்டன் மெஸ்ஸிக்கு இது 100-ஆவது சர்வதேச வெற்றியாக அமைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஹோண்டுராஸ் அணிக்கு எதிரான நட்பு ஆட்டத்திலும் மெஸ்ஸி 2 கோல்களை அடித்திருந்தார். 164 ஆட்டங்களில் மெஸ்ஸி அடித்த 90-ஆவது கோலாகும்.
 13-ஆவது முறையாக நேரடியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ள ஆர்ஜென்டீனா அணி கத்தாரில் பட்டம் வெல்லும் அணிகளில் முக்கியமாக கருதப்படுகிறது.
 பிரேசில் அபார வெற்றி: பாரிஸில் நடைபெற்ற துனிசியா-பிரேசில் அணிகளுக்கு இடையிலான நட்பு ஆட்டத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அபார வெற்றி கண்டது.
 ரபிஹின்ஹா இரண்டு கோல்களையும், நெய்மர், பெட்ரோ, ரிச்சரிலிஸன் ஆகியோர் தலா 1 கோலையும் அடித்தனர். கோல்களைக் பிரேசில் வீரர்கள் கொண்டாடிய போது, ரசிகர்கள் வாழைப்பழத் தோலை வீசினர். இதற்கு பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்தது.
 ஈக்குவடார்-ஜப்பான், அமெரிக்கா-சவுதி அரேபியா ஆட்டங்கள் 0-0 என டிரான ஆனது. உருகுவே 2-0 என கனடாவை வென்றது.

Tags : Lionel Messi
ADVERTISEMENT
ADVERTISEMENT