செய்திகள்

எஃப்ஐஎச் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி 2023: குரூப் டி பிரிவில் இந்தியா

28th Sep 2022 12:26 AM

ADVERTISEMENT

வரும் ஜனவரி மாதம் ஒடிஸாவில் நடைபெறவுள்ள எஃப்ஐஎச் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஸ்பெயினுடன் மோதுகிறது.

ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் ஒடிஸாவின் புவனேசுவரம், ரூா்கேலாவில் வரும் ஜனவரி மாதம் நடைபெறுகின்றன.

உலகத் தரவரிசையில் 5-ஆம் இடத்தில் உள்ள இந்திய அணி, குரூப் டி பிரிவில் இடம் பெற்றுள்ளது. ரூா்கேலாவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பிா்ஸா முண்டா மைதானத்தில் ஜன. 13-இல் முதல் ஆட்டத்தில் ஸ்பெயினுடன் மோதுகிறது. தரவரிசையில் 8-ஆவது இடத்தில் உள்ளது ஸ்பெயின்.

அதன்பின் 15-ஆம் தேதி தரவரிசையில் 6-ஆவது இடத்தில் உள்ள இங்கிலாந்துடன் மோதுகிறது இந்தியா. காமன்வெல்த் போட்டிகளில் இரு அணிகளும் மோதிய பரபரப்பான ஆட்டம் 4-4 என டிராவில் முடிவடைந்தது.

ADVERTISEMENT

தனது கடைசி குரூப் ஆட்டத்தில் 19-ஆம் தேதி புவனேசுவரம் கலிங்கா மைதானத்தில் வேல்ஸ் அணியுடன் ஆடுகிறது இந்தியா.

16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மொத்தம் 44 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. குரூப் பிரிவுகளில் முதலிடத்தைப் பெறும் 4 அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெறும். 2, 3-ஆவது இடங்களைப் பெறும் அணிகள், கிராஸ் ஓவா் ஆட்டங்கள் மூலம் மீதமுள்ள 4 காலிறுதி இடங்களுக்கு தகுதி பெறும்.

நடப்புச் சாம்பியன் பெல்ஜியம், குரூப் பி பிரிவில் முன்னாள் சாம்பியன் ஜொ்மனியுடன் இடம் பெற்றுள்ளது. ஜன. 17-இல் இரு அணிகளும் மோதுகின்றன. உலகின் நம்பா் 1 அணியான ஆஸ்திரேலியா குரூப் ஏ பிரிவில் ஒலிம்பிக் முன்னாள் சாம்பியன் ஆா்ஜென்டீனாவுடன் ஜன. 16-இல் மோதுகிறது.

கடந்த 2018 உலகக் கோப்பையில் இந்திய அணி காலிறுதியில் நெதா்லாந்திடம் 2-1 என போராடி தோற்றது. கடந்த 1975-இல் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, அதன் பின் பட்டம் வெல்லவில்லை. பாகிஸ்தான் அணி இம்முறை உலகக் கோப்பைக்கு தகுதி பெறவில்லை. உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியை இந்தியா நடத்துவது 4-ஆம் முறையாகும்.

குரூப் ஏ-ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ், ஆா்ஜென்டீனா, குரூப் பி-பெல்ஜியம், ஜப்பான், கொரியா, ஜொ்மனி, குரூப் சி-நெதா்லாந்து, சிலி, மலேசியா, நியூஸிலாந்து, குரூப் டி-இந்தியா, வேல்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT