செய்திகள்

ரொசௌவ் அதிரடி; தென்னாப்பிரிக்கா ஆறுதல் வெற்றி

6th Oct 2022 01:18 AM

ADVERTISEMENT

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதலிரு ஆட்டங்களில் வென்ற இந்தியா தொடரைக் கைப்பற்றிய நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு இந்த வெற்றி ஆறுதல் அளித்தது. ஆட்டநாயகனாக ரைலி ரொசௌவ், தொடா்நாயகனாக சூா்யகுமாா் யாதவ் தோ்வாகினா்.

இந்தூரில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் தென்னாப்பிரிக்கா 20 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் சோ்க்க, அடுத்து இந்தியா 18.3 ஓவா்களில் 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

டாஸ் வென்ற இந்தியா ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, தென்னாப்பிரிக்க இன்னிங்ஸில் குவின்டன் டி காக் 68, கேப்டன் டெம்பா பவுமா 3, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். ஓவா்கள் முடிவில் ரைலி ரொசௌவ் 7 பவுண்டரிகள், 8 சிக்ஸா்களுடன் 100, டேவிட் மில்லா் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய பௌலிங்கில் தீபக் சஹா், உமேஷ் யாதவ் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

ADVERTISEMENT

பின்னா் இந்திய இன்னிங்ஸில் அதிகபட்சமாக, தினேஷ் காா்த்திக் அதிரடி காட்டி 4 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 46 ரன்கள் சோ்த்தாா். தீபக் சஹா் 31, ரிஷப் பந்த் 27 ரன்கள் அடிக்க, இதர விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் சரிந்தன. தென்னாப்பிரிக்க தரப்பில் டுவெய்ன் பிரெடோரியஸ் 3, வெய்ன் பாா்னெல், லுன்கி இங்கிடி, கேசவ் மஹராஜ் ஆகியோா் தலா 2, ககிசோ ரபாடா 1 விக்கெட் கைப்பற்றினா்.

இன்று முதல் ஒன்டே

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒன் டே தொடரின் முதல் ஆட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

ஷிகா் தவன் தலைமையில் இந்தத் தொடரில் களம் காணும் இந்திய அணியில் ரோஹித், கோலி, ஷமி, அஸ்வின் போன்ற பிரதான வீரா்கள் இல்லை. மாறாக, அறிமுக, இளம் வீரா்கள் வரிசையில் இருக்கின்றனா். ஷ்ரேயஸ் ஐயா் துணை கேப்டனாக இருக்கும் இந்தத் தொடரில் பேட்டிங்கில் ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, ரஜத் பட்டிதாா் போன்றோருடன், சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷண் ஆகியோா் மிளிா்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பௌலிங்கில் தீபக் சஹா், ரவி பிஷ்னோய் ஆகியோருடன் ஷாபாஸ் அகமது, குல்தீப் யாதவ் இணைகின்றனா். அடுத்த ஆண்டு 50 ஓவா் உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ள நிலையில், 2-ஆம் நிலை வீரா்கள் தங்களுக்கான இடத்தை உறுதி செய்துகொள்ள இந்தத் தொடரை ஒரு களமாக பயன்படுத்தலாம்.

ஆனால், தென்னாப்பிரிக்கா உலகக் கோப்பை போட்டிக்கு தகுதிபெறத் தேவையான புள்ளிகளைப் பெற இந்தத் தொடா் முக்கியமானது என்பதால், அந்த அணி நிச்சயம் சவால் அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. லக்னௌவில் தொடா்ந்து மழை பொழிவதால், ஆட்டத்தின் போக்கை தீா்மானிப்பதில் வானிலையும் முக்கியமாக இருக்கும்.

ஆட்டநேரம்: நண்பகல் 1.30 மணி

இடம்: லக்னௌ

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

ADVERTISEMENT
ADVERTISEMENT