செய்திகள்

கடைசி டி20: தென்னாப்பிரிக்காவுக்கு ஆறுதல் வெற்றி

4th Oct 2022 11:41 PM

ADVERTISEMENT

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (அக்டோபர் 4) நடைபெற்றது. 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் குவித்தது. 

இதனையடுத்து, 228 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது இந்திய அணி. இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா ரன் எடுக்காமலும், ஸ்ரேயஸ் ஐயர் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இதனையடுத்து, ரிஷப் பந்த் உடன் ஜோடி சேர்ந்தார் தினேஷ் கார்த்திக். இந்த இணை சீராக ரன்கள் குவித்த போதிலும் பந்த் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: லவ் டுடே டிரைலரை வெளியிடும் சிம்பு! 

தினேஷ் கார்த்திக் ஒரு புறம் அதிரடியாக ஆட மறுமுனையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த வண்ணமே இருந்தனர்.சூர்யகுமார் யாதவ் 8 ரன்னிலும், அக்சர் படேல் 9 ரன்னிலும், அஸ்வின் 2 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதிரடியாக விளையாடிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 21 பந்துகளில் 46 ரன்கள் குவித்து வெளியேறினார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

பின்வரிசை ஆட்டக்காரர்களில் தீபக் சஹார் 17 பந்துகளில் அதிரடியாக 31 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 18.3 ஓவர்களில் 178 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்மூலம், 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

தென்னாப்பிரிக்கா சார்பில் சிறப்பாக பந்துவீசிய பிரிடோரியஸ் 3 விக்கெட்டுகளையும், பர்னல், லுங்கி நிகிடி மற்றும் கேசவ் மகாராஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே இந்திய அணி தொடரைக் கைப்பற்றிய நிலையில் இன்றையப் போட்டியில் வென்றதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்தது.

Tags : ind vs sa t20
ADVERTISEMENT
ADVERTISEMENT