செய்திகள்

கோட்டை விட்ட இங்கிலாந்து: அமெரிக்காவுடன் டிரா (0-0)

27th Nov 2022 12:01 AM

ADVERTISEMENT

பிஃபா உலகக் கோப்பை போட்டியின் குரூப் பி பிரிவு ஆட்டத்தில் பலம் வாய்ந்த இங்கிலாந்து-அமெரிக்க அணிகள் மோதிய ஆட்டம் 0-0 என கோலின்றி டிராவில் முடிந்தது. எளிதாக ரவுண்ட் 16 சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை கோட்டை விட்டது அலட்சியமான ஆட்டத்தால் இங்கிலாந்து.

தரவரிசையில் இங்கிலாந்து 5, அமெரிக்கா 16 ஆவது இடங்களில் உள்ளன. ஒருமுறை உலகக் கோப்பை வென்றுள்ள இங்கிலாந்துக்கு மீண்டும் அந்த வாய்ப்பு கிட்டவில்லை. கடந்த 2018-இல் நான்காம் இடத்தைப் பெற்றது. அமெரிக்கா தனது 11-ஆவது உலகக் கோப்பையில் ஆடுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஆரம்பம் முதலே விறுவிறுப்பின்றி காணப்பட்டது.

ஹாரி கேன் உள்பட பல்வேறு நட்சத்திர வீரா்களை கொண்ட இங்கிலாந்து அணியால், அமெரிக்காவின் தற்காப்பு அரணை ஊடுருவி கோலடிக்க முடியவில்லை.

ADVERTISEMENT

முதல் பாதி 0-0 என சமநிலையில் இருந்தது. இரண்டாம் பாதி ஆட்டத்திலும் அமெரிக்க வீரா்கள் அபாரமாக ஆடி, இங்கிலாந்தின் கோலடிக்கும் வாய்ப்புகளை வீணடித்தனா்.

இந்த உலகக் கோப்பையில் இரண்டாவது இளம் அணி என்ற சிறப்பை பெற்ற அமெரிக்கா வீரா்கள் தற்காப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்தினா்.

பட்டம் வெல்லும் அணியாக கருதப்படும் இங்கிலாந்து அதற்கேற்ப ஆடவில்லை. இதில் வென்றிருந்தால் ரவுண்ட் 16 சுற்றுக்கு எளிதில் தகுதி பெற்றிருக்கலாம்.

அடுத்து வேல்ஸை வெல்ல வேண்டும் இங்கிலாந்து. மற்றொரு ஆட்டத்தில் ஈரானை வீழ்த்த வேண்டும் அமெரிக்கா.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT