செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர் தோல்விகள் ஏன்?: வங்கதேச கேப்டன் பதில்

28th Jun 2022 05:36 PM

ADVERTISEMENT

 

எல்லாத் துறைகளிலும் நாங்கள் முன்னேற வேண்டும் என வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் கூறியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள வங்கதேச அணி, இரு டெஸ்டுகளிலும் தோல்வியடைந்துள்ளது. முதல் டெஸ்டை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற மே.இ. தீவுகள் அணி, 2-வது டெஸ்டை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கடைசியாக விளையாடிய மூன்று டெஸ்ட் தொடர்களிலும் வங்கதேச அணி தோல்வியடைந்துள்ளது. சொந்த மண்ணில் பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிராகத் தோற்ற பிறகு தற்போது மே.இ. தீவுகளிடம் தோல்வியடைந்துள்ளது. 

வங்கதேச அணியின் தோல்விகள் பற்றி அந்த அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் கூறியதாவது:

ADVERTISEMENT

2-வது டெஸ்டில் இடைவேளையின்போது விக்கெட்டுகளை இழந்ததால் பின்னடைவைச் சந்திக்க நேர்ந்தது. அந்த விக்கெட்டுகளை இழக்காமல் இருந்திருந்தால் நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் எல்லாத் துறைகளிலும் நாங்கள் முன்னேற வேண்டும். அடுத்த டெஸ்ட் விளையாடுவதற்கு முன்பு நீண்ட இடைவெளி உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆசைப்படுவர்கள் கிடைத்துள்ள இந்த அவகாசத்தில் தங்களை நன்கு மேம்படுத்திக்கொள்ள வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி உடனடியாக நன்றாக விளையாடக் கூடிய புதிய வீரர்கள் எங்களிடம் இல்லை. அனைவரும் ஒன்று சேர்ந்து திட்டம் தீட்டினால் நாங்கள் நன்கு விளையாட வாய்ப்பு உள்ளது. இதேபோல விளையாடினால் மாற்றங்களை எதிர்பார்ப்பது கடினம். சிந்திப்பதிலிருந்து நாங்கள் மாற்றம் கொண்டு வரவேண்டும். 

மற்ற நாடுகள் வெளிநாடுகளில் தோற்கின்றன. சொந்த மண்ணில் தோற்பதை நாங்கள் நிறுத்த வேண்டும். அப்படிச் செய்தால் சொந்த மண்ணில் பெறும் வெற்றிகள் வெளிநாடுகளில் விளையாடும்போது எங்களுக்கு உதவும். போட்டி மனப்பான்மையுடன் விளையாட வழிவகுக்கும். இங்கிலாந்து போல ஒரு டெஸ்ட் கலாசாரம் எங்கள் நாட்டில் இல்லை. அங்கு டெஸ்டுகளைப் பார்க்க தினமும் 30,000 பேர் வருகிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டை நாங்கள் மதிப்பதில்லை எனக் கூற முடியாது. ஆனால் எங்களால் வெற்றிகளைப் பெற முடியவில்லை என்றார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT