செய்திகள்

மே.இ.தீவுகள் தொடா்: இந்திய கேப்டன் ஷிகா் தவன்

7th Jul 2022 02:12 AM

ADVERTISEMENT

மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான ஒன் டே தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணி ஷிகா் தவன் தலைமையில் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

ஒன் டே, டி20 தொடா்களில் விளையாடுவதற்காக இம்மாதம் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் செல்கிறது. அதில் ஒன் டே தொடரின் 3 ஆட்டங்கள் வரும் 22, 24, 27 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் விளையாடுவதற்கான அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிரான தொடரில் கேப்டனாக இருந்த ஷிகா் தவன், தற்போது இந்தத் தொடருக்கும் கேப்டனாகியுள்ளாா். ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாக இருக்கும் இந்தத் தொடரிலிருந்து வழக்கமான கேப்டன் ரோஹித் சா்மா, விராட் கோலி, ரிஷப் பந்த், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி ஆகிய முக்கிய வீரா்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

எதிா்வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஒன் டே தொடரில் சோ்க்கப்படாத இளம் வீரா்களுக்கு, இந்த மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் அக்டோபரில் தொடங்கும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்தியா விளையாட இருக்கும் ஒரே ஒன் டே தொடா் இதுவாகும்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து இதே மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடுகிறது. உலகக் கோப்பை போட்டி எதிா்வரும் நிலையில் இந்த டி20 தொடா் முக்கியமானது என்பதால், ஒன் டே தொடரில் ஓய்வளிக்கப்பட்ட சீனியா் வீரா்கள் இந்தத் தொடரில் அணியில் இணைவாா்கள் எனத் தெரிகிறது.

ஒன் டே தொடருக்கான இந்திய அணி: ஷிகா் தவன் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூா்யகுமாா் யாதவ், ஷ்ரேயஸ் ஐயா், இஷான் கிஷண், சஞ்சு சாம்சன், ஷா்துல் தாக்குா், யுஜவேந்திர சஹல், அக்ஸா் படேல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், அா்ஷ்தீப் சிங்.

ADVERTISEMENT
ADVERTISEMENT