செய்திகள்

தோனியின் மின்னல் வேக முடிவுகளும் இந்திய அணி பெற்ற வெற்றிகளும்! (விடியோக்கள்)

7th Jul 2022 11:45 AM

ADVERTISEMENT

 

இன்று 41-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் தோனி.

ஆடுகளத்தில் தோனி எடுத்த பல புத்திசாலித்தனமான முடிவுகள் இந்திய அணிக்கு வெற்றிகளுக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன. இதனால்தான் அவரால் தலைசிறந்த கேப்டனாக இருக்க முடிந்தது.

2007-ல் டி20 உலகக் கோப்பை, 2011-ல் ஒருநாள் உலகக் கோப்பை, 2013-ல் சாம்பியன்ஸ் கோப்பை என மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்ற முதல் கேப்டன் - தோனி மட்டுமே.

ஒரு கேப்டனாக தோனி எடுத்த உறுதியான ஐந்து முடிவுகளை இப்போது பார்க்கலாம்.

ADVERTISEMENT

ஜொகிந்தர் சர்மாவுக்கு வழங்கப்பட்ட கடைசி ஓவர்

மூத்த வீரர்கள் அணியில் இல்லை. ஒரு கேப்டனாக தோனிக்கு வழங்கப்பட்ட முதல் பெரிய பொறுப்பு. 2007 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கியபோது அது ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாக மாறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றி பெற 13 ரன்கள் தேவை என்கிற நிலையில் ஜொகிந்தர் சர்மாவைப் பந்துவீச அழைத்தார் தோனி.

35 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்த மிஸ்பா உல் ஹக், பேட்டிங் செய்து வந்தார். இதனால் நிலைமை மிகவும் பரபரப்பாக இருந்தது. அந்த ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தாலும் கடைசியில் ஸ்ரீசாந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் மிஸ்பா. இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது.

2013 சாம்பியன்ஸ் டிராபி இறுதிச்சுற்று

18 பந்துகளில் 28 ரன்கள். 6 விக்கெட்டுகள் கைவசம் உள்ளன. இங்கிலாந்து அணி நிச்சயம் ஜெயிக்கும் என்கிற நிலைமை. 18-வது ஓவரை வீச இஷாந்த் சர்மாவை அழைத்தார் தோனி. ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் இஷாந்த். கோப்பையை வென்றது இந்தியா. 

2013 முத்தரப்புப் போட்டி

இறுதிச்சுற்றில் இலங்கையுடன் மோதியது இந்தியா. இலங்கை 201 ரன்கள் எடுத்தது. ஆனால் 182 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. கடைசியாக தோனியும் இஷாந்த் சர்மாவும் மட்டுமே. 18 பந்துகளில் 19 ரன்கள் தேவை. 48-வது ஓவரை மலிங்கா வீசினார். சிங்கிள் ரன் எடுக்க வாய்ப்பிருந்தும் இஷாந்த் சர்மா, மலிங்கா பந்துவீச்சை எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காக அவற்றைத் தவிர்த்தார் தோனி. இதனால் கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டன. எரங்கா வீசிய அந்த ஓவரில் இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்து வெற்றி தேடித்தந்தார் கேப்டன் கூல். 

2011 உலகக் கோப்பைப் போட்டி இறுதிச்சுற்றில் 5-ம் நிலை வீரராகக் களமிறங்கியது!

2011 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இலங்கை அணியை வீழ்த்தி தோனி தலைமையிலான இந்தியா உலக சாம்பியன் ஆனது.

275 ரன்கள் என்கிற இலக்கை இந்திய அணி அடைய முயன்றபோது ஆரம்பத்தில் சிறிது தடுமாறியது. சச்சின், சேவாக், கோலி ஆகியோர் ஆட்டமிழந்த பிறகு யுவ்ராஜ் சிங் தான் வழக்கம் போல களமிறங்குவார் என ரசிகர்கள் எண்ணினார்கள். ஆனால் இன்னமும் 161 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி என்கிற நிலையில் 5-ம் நிலை வீரராகக் களமிறங்கினார் தோனி. கம்பீருடன் அற்புதமாகக் கூட்டணி அமைத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். தோனி எடுத்த 91 ரன்களை விடவும் கடைசியில் அவர் சிக்ஸர் அடித்து உலகக் கோப்பையை முடித்தது வரலாற்றுத் தருணமாகிவிட்டது.

2016 டி20 உலகக்கோப்பை

ரசிகர்களால் இந்த ஆட்டத்தையும் கடைசிப் பந்தையும் மறக்கவேமுடியாது. வங்கதேசத்துக்கு மூன்று பந்துகளில் இரண்டு ரன்கள் தேவை. ஆனால் அடுத்த இரு பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்தினார் பாண்டியா. கடைசிப் பந்தின்போது கையுறைக் கழற்றினார் தோனி. இதுதான் நடக்கும் என்பதை அவர் முன்பே கணித்திருந்தார். பேட்ஸ்மேனால் அந்தப் பந்தை எதிர்கொள்ளமுடியவில்லை. கடைசிப் பந்து அவரிடமே சென்றது. ஆனாலும் ரன் எடுக்க முயன்றார்கள் வங்கதேச வீரர்கள். பாய்ந்துவந்து ஸ்டம்பை வீழ்த்தினார் தோனி. அடடா! என்ன ஒரு காட்சி!

ADVERTISEMENT
ADVERTISEMENT