செய்திகள்

நியூசிலாந்து வீரர், வீராங்கனைகளுக்குச் சம ஊதியம்: அறிவிப்பு

5th Jul 2022 02:05 PM

ADVERTISEMENT

 

நியூசிலாந்து அணிக்காக விளையாடும் வீரர், வீராங்கனைகளுக்குச் சம ஊதியம் அளிக்கவுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆடவர், மகளிர் என இரு பிரிவாக கிரிக்கெட் ஆட்டங்கள் விளையாடப்பட்டாலும் ஊதியம் வழங்குவதில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. பொதுவாக ஆடவர் பிரிவில் விளையாடும் வீரர்களுக்கு அதிக ஊதியம் கிடைக்கும். இதனால் இரு தரப்பினருக்கும் சமமான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாகக் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.

இதையடுத்து வீரர், வீராங்கனைகளுக்குச் சமமான ஊதியத்தை வழங்க நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் முன்வந்துள்ளது. அதன்படி டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடும் நியூசிலாந்து ஆடவர், மகளிர் அணியினருக்குத் தலா ரூ. 5 லட்சமும் (10,250 நியூசி. டாலர்) ஒருநாள் கிரிக்கெட்டுக்குத் தலா 1.95 லட்சமும் (4,000 நியூசி. டாலர்) டி20 கிரிக்கெட்டுக்குத் தலா 1.22 லட்சமும் (2,500 நியூசி. டாலர்) இனிமேல் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. 

ADVERTISEMENT

ஒப்பந்தத்தில் அதிக தரவரிசை கொண்ட வீராங்கனை வருடத்துக்கு ரூ. 79.74 லட்சம் (163,246 நியூசி. டாலர்) ஊதியமாகப் பெறுவார். ஆனால் இந்தத் தொகை ஆடவர் பிரிவில் அதிகம். அதிக தரவரிசை கொண்ட வீரர், வருடத்துக்கு ரூ. 2.56 கோடி (523,396 நியூசி. டாலர்) பெறுவார். ஆகஸ்ட் 1 முதல் இந்தப் புதிய நடைமுறை அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடவர், மகளிர் என இரு அணியினருக்கும் சம ஊதியம் வழங்க முடிவெடுத்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

Tags : New Zealand
ADVERTISEMENT
ADVERTISEMENT