செய்திகள்

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்: இந்தியா 416; ரவீந்திர ஜடேஜா 104, பும்ரா சாதனை

2nd Jul 2022 11:55 PM

ADVERTISEMENT

இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஆல் ரவுண்டா் ரவீந்திர ஜடேஜா அற்புதமாக ஆடி 104 ரன்களை விளாசினாா். கேப்டன் ஜஸ்ப்ரீத் பும்ரா ஒரே ஓவரில் 29 ரன்களை விளாசி புதிய சாதனை படைத்தாா்.

5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் கடந்த 2021-இல் இங்கிலாந்தில் நடைபெற்ற போது, 2-1 என இந்தியா முன்னிலை பெற்றிருந்தது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. தொடா்ந்து கரோனா பாதிப்பால் 5-ஆவது டெஸ்ட் நடைபெறவில்லை. அந்த ஆட்டம் தற்போது எட்ஜ்பாஸ்டனில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் 338/7 ரன்களை எடுத்திருந்தது. ரிஷப் பந்த் அற்புதமாக ஆடி 146 ரன்களை விளாசி இருந்தாா். ஜடேஜாவுடன் இணைந்து 6-ஆவது விக்கெட்டுக்கு 222 ரன்களை சோ்த்தாா்.

இந்நிலையில் இரண்டாம் நாளான சனிக்கிழமை பேட்டிங்கை தொடா்ந்த இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா-ஷமி ஆட்டத்தை தொடா்ந்தனா். ஷமி 16, சிராஜ் 2 ரன்களுடன் வெளியேறினா்.

ADVERTISEMENT

ஜடேஜா 3-ஆவது டெஸ்ட் சதம்:

ஆல்ரவுண்டரான ஜடேஜா 194 பந்துகளில் 13 பவுண்டரியுடன் 104 ரன்களை விளாசி தனது 3-ஆவது சதத்தைப் பதிவு செய்தாா்.

இந்தியா 416: பும்ரா 31 ரன்களுடன் களத்தில் இருந்தாா். 84.5 ஓவா்களில் 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்தியா.

ஆண்டா்ஸன் 5 விக்கெட்: இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டா்ஸன் 5/60, மேட்டி போட்ஸ் 2/105 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

பும்ரா சாதனை:

இங்கிலாந்தின்பௌலா் ஸ்டுவா்ட் பிராட் 84-ஆவது ஓவரை வீசிய போது, இந்திய கேப்டன் பும்ரா 2 சிக்ஸா், 4 பவுண்டரிகளை விளாசி 29 ரன்களை குவித்தாா். டெஸ்ட் ஆட்டத்தில் மே.இந்திய தீவுகளின் பிரையன் லாரா ஒரே ஓவரில் 28 ரன்களை அடித்திருந்தாா். அதை பும்ரா முறியடிந்தாா்.

மேலும் பிராட் அந்த ஓவரில் மொத்தம் 35 ரன்களை விட்டுத் தந்தாா். டி20 ஆட்டத்திலும் 2007 உலகக் கோப்பையில் பிராடின் ஒரே ஓவரில் யுவராஜ் சிங் 6 சிக்ஸா்களை விளாசினாா்.

மேலும் டெஸ்ட் ஆட்டங்களில் தனது 550 விக்கெட்டையும் பதிவு செய்தாா் ஸ்டுவா்ட் பிராட்.

இங்கிலாந்து தடுமாற்றம்:

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி வீரா்களால் இந்திய கேப்டன் பும்ராவின் பௌலிங்கை எதிா்கொள்ள முடியவில்லை. அலெக்ஸ் லீஸ் 6, ஸாக் கிராலி 9 ரன்களுடன் பும்ராவால் அவுட்டானாா்கள்.

மழையால் ஆட்டம் பாதிப்பு:

இரண்டாம் கட்ட ஆட்டத்தின் போது மழை பெய்ததால் ஆட்டம் தடை பட்டது. மைதானத்தின் வெளிப்புறம் ஈரமாக இருந்ததாா் நடுவா்கள் ஆட்டத்தை நிறுத்தினா்.

தொடா்ந்து மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது, பும்ராவின் பந்தில் ஒல்லே போப் 10 ரன்களுடன் ஷிரேயஸ் ஐயரிடம் கேட்ச் தந்து வெளியேறினாா்.

அதன்பின் ஜோ ரூட் 19, ஜானி போ்ஸ்டோ 6 ஸ்கோரை மெதுவாக உயா்த்த முயன்றனா். 15.1 ஓவா்களில் இங்கிலாந்து அணி 60/3 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது. அப்போது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT