செய்திகள்

5-வது டெஸ்ட்: சதமடித்தார் ஜடேஜா

2nd Jul 2022 03:36 PM

ADVERTISEMENT

 

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் சதமடித்துள்ளார் இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜா.

இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. கடந்த வருடம் ரத்தான 5-வது டெஸ்ட், இப்போது நடைபெறுகிறது. ரோஹித் சர்மா கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பும்ரா இந்திய அணியின் கேப்டனாகச் செயல்படுகிறார்.

பிர்மிங்கமில் நடைபெறும் 5-வது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் ஷர்துல் தாக்குர், ஜடேஜா, விஹாரி, புஜாரா ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். அஸ்வினுக்கு இந்தமுறையும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ADVERTISEMENT

முதல் நாள் முடிவில் இந்திய அணி, 73 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்களுடன் தடுமாறியபோது ரிஷப் பந்தும் ஜடேஜாவும் அருமையான கூட்டணியை அமைத்தார்கள். ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி 89 பந்துகளில் சதமடித்தார். அதன்பிறகும் நன்கு விளையாடி 111 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகளுடன் 146 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பந்தும் ஜடேஜாவும் 6-வது விக்கெட்டுக்கு 239 பந்துகளில் 222 ரன்கள் கூட்டணி அமைத்தார்கள். ஜடேஜா 109 பந்துகளில் அரை சதமெடுத்தார். முதல் நாள் முடிவில் ஜடேஜா 83 ரன்களுடனும் ஷமி ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தார்கள்.

இந்நிலையில் இன்று ஜடேஜா - ஷமி கூட்டணி பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை நன்கு எதிர்கொண்டார் ஷமி. இதனால் ஜடேஜாவால் இயல்பாக விளையாட முடிந்தது. ரசிகர்கள் எதிர்பார்த்தபடி சதத்தைப் பூர்த்தி செய்தார். 183 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் சதமடித்தார் ஜடேஜா. இது அவருடைய 3-வது டெஸ்ட் சதம்.

இந்திய அணி 79 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 100, ஷமி 16 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

Tags : Jadeja
ADVERTISEMENT
ADVERTISEMENT