செய்திகள்

சென்னை வந்தார் தோனி: காரணம் வெளியிட்ட சிஎஸ்கே

28th Jan 2022 01:53 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் ஏலம் தொடர்பாக சிஎஸ்கே குழுவினருடன் விவாதிப்பதற்காக கேப்டன் தோனி, சென்னைக்கு வந்துள்ளார்.

ஐபிஎல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெறவுள்ளது. 2018-க்குப் பிறகு நடைபெறும் மெகா ஏலம் என்பதால் இந்த வருட ஏலம் இரு நாள்களுக்கு நடைபெறவுள்ளது.  ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வருடம் முதல் லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. 

ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ள 1214 வீரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். அணிகளின் விருப்பத்தைக் கேட்டுவிட்டு ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் இறுதிப் பட்டியல் உருவாக்கப்படும். அந்தப் பட்டியல், ஏலம் நடைபெறும் சில நாள்களுக்கு முன்பு வெளியிடப்படும். மிட்செல் ஸ்டார்க், சாம் கரண், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் கெயில், ஜோஃப்ரா ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸ் ஆகிய டி20 பிரபலங்கள் ஏலத்தில் இடம்பெறுவதற்காகத் தங்கள் பெயரைக் கொடுக்கவில்லை.

ADVERTISEMENT

பழைய 8 அணிகளும் தக்கவைத்துக் கொண்ட வீரா்களின் பட்டியலும் இரு புதிய அணிகள் தேர்வு செய்த வீரர்களின் பட்டியலும் சமீபத்தில் வெளியாகின. சிஎஸ்கே அணியில் ஜடேஜா, தோனி, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட் போன்றோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் ஐபிஎல் ஏலம் தொடர்பாக சிஎஸ்கே குழுவினருடன் விவாதிப்பதற்காக சென்னைக்கு வந்துள்ளார் அந்த அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி.

இத்தகவல் குறித்து சிஎஸ்கே நிர்வாகம், ட்விட்டரில் தெரிவித்ததாவது:

ஆமாம். ஏலம் தொடர்பாக விவாதிப்பதற்காக இன்று சென்னைக்கு வந்துள்ளார் தோனி. ஏலத்தில் அவர் இடம்பெற வாய்ப்புள்ளது. ஆனால் அது தோனியின் முடிவு. ஏலம் நடைபெறும் நாள் நெருங்கும்போது இதுபற்றி அவர் முடிவெடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது.  

 
ADVERTISEMENT
ADVERTISEMENT