செய்திகள்

ஆசிய கோப்பை கால்பந்து: கரோனா பாதிப்பால் இந்திய மகளிர் அணி விலகல்!

24th Jan 2022 02:09 PM

ADVERTISEMENT

 

ஆசிய கால்பந்து சம்மேளனம் (ஏஎஃப்சி) நடத்தும் மகளிருக்கான 20-ஆவது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி மகாராஷ்டிர மாநிலம், நவி மும்பையில் சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது.

கடந்த 1979-ம் ஆண்டு முதல் முறையாக இப்போட்டியை நடத்திய இந்தியா, தற்போது 2-வது முறையாக அதை ஒருங்கிணைக்கிறது. இப்போட்டியில் இதுவரை 8 முறை பங்கேற்ற நிலையில் கடந்த 1979 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளில் 2-ம் இடங்களைப் பிடித்ததே இந்தியாவின் அதிகபட்சமாகும். இதுதவிர 1981-இல் 3-ம் இடமும் பிடித்திருக்கிறது. அதிகபட்சமாக சீனாவே 7 முறை இதில் சாம்பியன் ஆகியிருக்கிறது. அதுவும் தொடா்ந்து 7 முறை கோப்பை வென்று சாதனை படைத்திருக்கிறது.

குரூப் ஏ பிரிவில் இந்தியா, சீனா, சீன தைபே, ஈரான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. தனது முதல் ஆட்டத்தில் ஈரானுடன் கோலின்றி சமன் செய்தது இந்தியா. நேற்று, சீன தைபே அணிக்கு எதிராக விளையாடவிருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் போட்டியில் விளையாடக்கூடிய எண்ணிக்கையில் வீராங்கனைகள் கைவசம் இல்லாததால் போட்டியிலிருந்து விலகியுள்ளது இந்திய அணி. பல இந்திய வீராங்கனைகள் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இரு வீராங்கனைகளுக்குக் காயமும் ஏற்பட்டுள்ளது. விதிமுறைப்படி ஆட்டத்தில் பங்கேற்க 13 வீராங்கனைகள் இருக்கவேண்டும். ஆனால் 23 பேர் கொண்ட இந்திய அணியில் 11 பேர் மட்டுமே நல்ல உடற்தகுதியுடன் இருந்ததால் சீன தைபேவுடன் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து இந்திய அணி எதிர்பாராத விதத்தில் போட்டியிலிருந்து விலகியுள்ளது. இதனால் இந்தப் போட்டியில் இந்திய அணியின் மூன்று ஆட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆசிய கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. 

ஆசிய கோப்பைப் போட்டியில் அரையிறுதிக்குத் தகுதி பெறும் அணிகள் 2023-ல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறும் ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெறும். இதனால் உலகக் கோப்பைப் போட்டியில் பங்குபெறும் வாய்ப்பையும் இந்திய மகளிர் அணி இழந்துள்ளது. இத்தகவலால் இந்தியக் கால்பந்து வீராங்கனைகளும் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT