செய்திகள்

யாருக்கு வெற்றி ?

மோகன ரூபன்

இன்று 2022 உலகக் கோப்பை கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி. ஆர்ஜென்டீனா, பிரான்ஸ் அணிகள் அனல் பறக்க களம் காண இருக்கின்றன.

ஆர்ஜென்டீனாவுக்கு 36 விழுக்காடு வெற்றி வாய்ப்பும், பிரான்சுக்கு 34 விழுக்காடு வெற்றி வாய்ப்பும் இருப்பதாக வல்லுநர்கள் சொல்கிறார்கள். ராக்கி ஆமை வேறு ஆர்ஜென்டீனாவுக்குத்தான் வெற்றி கிடைக்கும் என்று சொல்லிவிட்டது. பார்க்கலாம். ஆறாவது முறையாக உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குள் கால் பதித்துள்ளது ஆர்ஜென்டீனா அணி. ஆர்ஜென்டீனா வென்றால் 3ஆவது முறையாகக் கோப்பையை வென்ற பெருமை அந்த அணிக்குக் கிடைக்கும். பிரான்ஸ் வெற்றி பெற்றால், இத்தாலி, பிரேசில் நாடுகளைத் தொடர்ந்து, அடுத்தடுத்து தொடர்ச்சியாக, 2 உலகக்கோப்பைகளில் வென்ற பெருமையை பிரான்ஸ் தட்டிச் செல்லும். மெஸ்ஸி இன்று ஆடப்போகும் போட்டி, அவரது 26ஆவது உலகக் கோப்பைப் போட்டி. இதுவே ஒரு சாதனைதான். 

ஜெர்மன் வீரர் லோதர் மேத்யூ, 25 உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆடியவர். இந்த சாதனையை மெஸ்ஸி இன்று சத்தமில்லாமல் முறியடிக்க இருக்கிறார். உலகக் கால்பந்துப் போட்டிகளில் இதற்குமுன் 2,217 மணித்துளிகள் (நிமிடங்கள்) ஆடி உலக சாதனை படைத்திருப்பவர் இத்தாலி நாட்டின் பாவ்லோ மால்ட்டினி. மெஸ்ஸி, இந்த 2022  உலகக் கோப்பைப் போட்டிகளில் இதுவரை 2,194 மணித்துளிகள் ஆடிய பெருமைக்குரியவர். இன்றைய போட்டியில் மெஸ்ஸி வெறும் 24 மணித்துளிகள் ஆடினால் போதும். பாவ்லோ மால்ட்டினியின் சாதனையை அவர் முறியடித்து விடுவார். இன்றைய உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மெஸ்ஸி ஒரேயொரு கோல் அடித்தால், உலகக் கோப்பை போட்டிகளில் பிரேசில் நாட்டின் கால்பந்தாட்ட மன்னன் பீலேயின் 12 கோல் சாதனையை சமன் செய்துவிடுவார். 2 கோல்கள் அடித்தாலோ பீலேயின் சாதனையை மெஸ்ஸி கடந்து சென்றுவிடுவார்.

இன்றைய போட்டியில் ஆர்ஜென்டீனா வென்றால், மெஸ்ஸி ஆடிய உலகக் கோப்பைப் போட்டிகளில் அவருக்குக் கிடைக்கப்போகும் 17ஆவது வெற்றியாக இந்த வெற்றி பரிமளிக்கும். இந்த வெற்றியின்மூலம், ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் குளோசின், 17 உலகக்கோப்பைப் ஆட்ட வெற்றிகளை மெஸ்ஸி சமன் செய்து விடுவார். இன்றைய வெற்றிக்குப்பிறகு, மெஸ்ஸிக்குத் தங்கப்பந்து கிடைத்தால், அந்த தங்கப்பந்தை இரண்டாவது முறையாகப் பெறும் முதல் வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெறுவார். (யப்பா! எவ்வளவு சாதனைகள் காத்திருக்கின்றன) 2010ஆம் ஆண்டு தொடக்கப்போட்டியில் தோல்வியைத் தழுவி, அதன்பிறகு இறுதிப்போட்டியில் கோப்பையை வென்ற பெருமை ஸ்பெயின் நாட்டுக்கு உண்டு.

இந்த உலகக்கோப்பைப் போட்டியில் சௌதி அரேபியாவிடம் ஆரம்பத்தில் தோல்வியைத் தழுவிய ஆர்ஜென்டீனா இறுதிப்போட்டியில் வென்றால், ஸ்பெயின் பெற்ற பெருமையை ஆர்ஜென்டீனாவும் பெறும். இன்றைய இறுதிப்போட்டி பெனால்டி சூட்அவுட்டுக்குப் போனால் ஆர்ஜென்டீனாவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். காரணம் மார்டினெஸ் என்ற சூரர், ஆர்ஜென்டீனாவின் கோல்காப்பாளராக இருக்கிறார்.  பிரான்ஸ் அணி, ஆர்ஜென்டீனா அணியை விட வேகமும், விறுவிறுப்பும் நிறைந்த அணி. தற்காப்பு, தாக்குதல் எல்லாவற்றிலும் மிக முழுமையான அணி அது. இறுக்கமான பாதுகாப்பு அரண் கொண்ட அணி என்பதுடன், ஆட்டத்தின் பாணியை தேவைக்கேற்ப உடனே மாற்றிக் கொள்ளக்கூடிய அணி அது.

இன்றைய மோதலில், மெஸ்ஸியை அடிக்கடி எதிர்கொள்ளப்போகிறவர் பிரான்ஸ் அணியின் நடுக்கள ஆட்டக்காரர் அவுரேலியான் டுவமெனி. அதேப்போல இந்த உலகக்கோப்பைப்போட்டியில் இதுவரை 5 கோல்கள் அடித்துள்ள பிரான்ஸ் அணியின் சூப்பர் ஸ்டார் கிளியன் பாபே, ஆர்ஜென்டீனா அணியின் இடதுபக்கத்துக்கு இன்று அடிக்கடி தொல்லை தர இருக்கிறார். அவரைத் தடுத்து நிறுத்தி ஆட இருப்பவர்கள் இருவர். ஒருவர் ஆர்ஜென்டீனா அணியின் வலதுபின்கள ஆட்டக்காரரான மொலினா. மற்றவர் ஆர்ஜென்டீனா அணியின் வலதுபின்கள ஆட்டக்காரரான நடுப்பின்கள வீரரான கிறிஸ்தியன் ரொமெரோ. இவர்கள் இருவரும் கிளியன் பாபேவை இன்று தடுத்து நிறுத்துவார்களா என்பதைப் பார்க்கலாம்.

பிரான்ஸ் அணி இன்றைய இறுதிப்போட்டியில் வெற்றி வாகை சூடினால், வெறும் 23 வயதிலேயே 2 முறை உலகக்கோப்பையை வென்ற அணியில் ஆடிய பெருமை இளம் வீரர் கிளியன் பாபேக்குக் கிடைக்கும். வெற்றி யார் பக்கம்? பார்ப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT