செய்திகள்

டிராவில் ஆர்வம் இல்லை: பென் ஸ்டோக்ஸ் திட்டவட்டம்

DIN

டெஸ்ட் ஆட்டங்களை டிரா செய்வதில் ஆர்வம் இல்லை என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் வரலாற்று வெற்றியை அடைந்து டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து அணி.

பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது இங்கிலாந்து அணி. ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 101 ஓவர்களில் 657 ரன்கள் எடுத்தது. ரன்ரேட் - 6.50. ஸாக் கிராவ்லி 122, பென் டக்கட் 107, ஆலி போப், ஹாரி புரூக் 153 ரன்கள் எடுத்தார்கள். பாகிஸ்தான் அணி 155.3 ஓவர்களில் 579 ரன்கள் எடுத்தது. அப்துல்லா ஷஃபிக் 114, இமாம் உல் ஹக் 121, கேப்டன் பாபர் ஆஸம் 136 ரன்கள் எடுத்தார்கள். இதனால் ஆட்டம் டிரா ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 35.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ரன்ரேட் - 7.36. கிராவ்லி 50, ரூட் 73, ஹாரி புரூக் 87 ரன்கள் எடுத்தார்கள். இதையடுத்து பாகிஸ்தான் அணிக்கு 343 ரன்கள் இலக்கு அளிக்கப்பட்டது. டிரா ஆகும் நிலைக்குச் சென்ற டெஸ்டை, டிக்ளேர் செய்ததன் மூலம் பரபரப்பு நிலைக்குக் கொண்டு சென்றார் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ். சவாலை ஓரளவு எதிர்கொண்ட பாகிஸ்தானால் கடைசி நாளில் இங்கிலாந்தின் பந்துவீச்சுக்கும் ஸ்டோக்ஸின் புத்திசாலித்தனக்கும் ஈடுகொடுக்க முடியவில்லை. 96.3 ஓவர்களில் 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஷகீல் அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்தார். ஆலி ராபின்சன், ஆண்டர்சன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்திக் கடைசி நாளில் அசத்தினார்கள். ஆட்ட நாயகன் விருது ஆலி ராபின்சனுக்கு வழங்கப்பட்டது. 

முதல் இன்னிங்ஸில் இரு அணிகளும் தலா 550 ரன்களுக்கும் அதிகமாக எடுத்து முடிவு எட்டப்பட்ட ஒரே டெஸ்ட் இதுதான். இதற்கு முன்பு இதுபோல முதல் இரு இன்னிங்ஸ்களிலும் 550 ரன்கள் எடுத்த 15 டெஸ்டுகளும் டிராவில் முடிந்துள்ளன. ராவல்பிண்டி டெஸ்டில் இரு அணிகளும் மொத்தமாக 1768 ரன்கள் எடுத்துள்ளன. ஒரு டெஸ்டில் மொத்தமாக அதிக ரன்கள் எடுக்கப்பட்டு முடிவு எட்டப்பட்டதும் இந்த டெஸ்டில் தான். 

புதிய கேப்டன் ஸ்டோக்ஸ் - புதிய பயிற்சியாளர் மெக்கல்லம் கூட்டணி இங்கிலாந்து கிரிக்கெட்டில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டை அணுகும் மனநிலையை வீரர்களிடம் மாற்றியதோடு அதற்குண்டான முடிவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஸ்டோக்ஸ் - மெக்கல்லம் கூட்டணி 7 வெற்றிகளையும் ஒரு தோல்வியையும் எதிர்கொண்டுள்ளது. அதற்கு முன்பு இங்கிலாந்து அணி விளையாடிய 17 டெஸ்டுகளில் ஒரு டெஸ்டில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. 

இந்நிலையில் பாகிஸ்தான் டெஸ்ட் வெற்றிக்குப் பிறகு இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் கூறியதாவது:

நானும் மெக்கல்லமும் இணைந்த பிறகு எதிரணியைப் பற்றி சிந்திப்பதை விடவும் எங்களுடைய திறமைகள் மீது தான் நாங்கள் அதிகக் கவனம் செலுத்துகிறோம். பேட்டிங், பந்துவீச்சில் நேர்மறையான எண்ணங்களுடன் இருக்க விரும்புகிறோம். எதிரணி என்ன செய்யும் எனச் சிந்திப்பதைத் தவிர்க்கிறோம். பாகிஸ்தானுக்கு வந்து விறுவிறுப்பான கிரிக்கெட் ஆட்டத்தில் பங்கேற்று வெற்றி பெற விரும்புகிறோம். டெஸ்ட் ஆட்டங்களை டிரா செய்வதில் எனக்கு ஆர்வம் இல்லை. எங்கள் அணி வீரர்களுக்கும் அந்த எண்ணம் இல்லை என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

SCROLL FOR NEXT