செய்திகள்

உலகக் கோப்பை: பிரேஸிலை வீழ்த்தி சாதித்த கேமரூன் அணி!

3rd Dec 2022 05:59 PM

ADVERTISEMENT

 

கால்பந்து உலகக் கோப்பையில் பிரேஸிலை ழ்த்திய முதல் ஆப்பிரிக்க நாடு என்கிற பெருமையைப் பெற்றுள்ளது கேமரூன் அணி.

நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் போர்ச்சுகலை தென் கொரியா 2-1 எனவும் கானாவை உருகுவே 2-0 எனவும் ஸ்விட்சர்லாந்து செர்பியாவை 3-2 எனவும் கேமரூன் பிரேஸிலை 1-0 எனவும் வீழ்த்தின. இதையடுத்து நேற்றைய ஆட்டங்களின் முடிவில் ஸ்விட்சர்லாந்தும் தென் கொரியாவும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

குரூப் ஜி பிரிவில் பிரேஸிலும் ஸ்விட்சர்லாந்தும் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. கேமரூன் அணி 4 புள்ளிகளுடன் 3-ம் இடத்தைப் பிடித்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.

ADVERTISEMENT

எனினும் கால்பந்து உலகக் கோப்பையில் பிரேஸிலைத் தோற்கடித்த முதல் ஆப்பிரிக்க நாடு என்கிற பெருமையை கேமரூன் பெற்றுள்ளது. 

கேமரூன் அணி உலகக் கோப்பையில் இதுவரை 5 வெற்றிகளைப் பெற்றுள்ளது. 1990-ல் பலம் வாய்ந்த ஆர்ஜென்டீனாவைத் தோற்கடித்துத் தனது கணக்கைத் தொடங்கியது. அதே போட்டியில் ரொமானியாவையும் கொலம்பியாவையும் தோற்கடித்து காலிறுதி வரை முன்னேறி அசத்தியது. இத்தனைக்கும் அது கேமரூன் பங்கேற்ற 2-வது உலகக் கோப்பை தான். 

பிறகு 2002-ல் சவூதி அரேபியாவைத் தோற்கடித்து தற்போது பிரேஸிலைத் தோற்கடித்துள்ளது. 

உலகக் கோப்பையில் பிரேஸிலைத் தோற்கடித்த 14-வது நாடு, கேமரூன். ஐரோப்பிய நாடுகள் 11 முறையும் தென் அமெரிக்க நாடுகள் 2 முறையும் பிரேஸிலை வீழ்த்தியுள்ளன. முதல்முறையாக ஆப்பிரிக்க நாடு ஒன்றிடம் வீழ்ந்துள்ளது பிரேஸில் அணி. 

ADVERTISEMENT
ADVERTISEMENT