செய்திகள்

முதல் டெஸ்ட்: இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் வலுவான தொடக்கம்

2nd Dec 2022 08:15 PM

ADVERTISEMENT

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி வலுவான தொடக்கத்தை கொடுத்துள்ளது.

பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது இங்கிலாந்து அணி. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்து தனது முதல் இன்னிங்ஸில் பல்வேறு சாதனைகளைப் படைத்தது.

இதையும் படிக்க: விஜய் ஹசாரே கோப்பை: செளராஷ்டிரம் சாம்பியன்

முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 75 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 506 ரன்கள் குவித்தது. ஸாக் கிராவ்லி 122, பென் டக்கட் 107, ஆலி போப் 108, புரூக் 101* ரன்கள் எடுத்து அசத்தினார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் நாளில் இதுவரை எந்த அணியும் 500 ரன்களை எடுத்ததில்லை. இதனால் 112 வருட சாதனையை முறியடித்தது இங்கிலாந்து. அதேபோல முதல் நாளில் எந்த அணி வீரர்களும் நான்கு சதங்கள் அடித்ததில்லை. 

ADVERTISEMENT

2-வது நாளில் இங்கிலாந்து அணி 101 ஓவர்களில் 657 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரன்ரேட் - 6.50. ஹாரி புரூக் 153, ஸ்டோக்ஸ் 41, வில் ஜாக்ஸ் 30, ஆலி ராபின்சன் 37 ரன்கள் எடுத்தார்கள். ஸாகித் முகமது 4 விக்கெட்டுகளையும் நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள்.

இன்றும் இங்கிலாந்தின் சாதனைகள் தொடர்ந்தன. டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸில் ஒரு ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் அணி என்கிற பெருமையை அடைந்தது இங்கிலாந்து. மேலும் ஒரு இன்னிங்ஸில் ஒரு ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் எடுத்ததில் அதிக ஓவர்களை விளையாடிய அணியும் இங்கிலாந்து தான். இதற்கு முன்பு 2005-ல் ஜிம்பாப்வேக்கு எதிராக 50 ஓவர்கள் வரை இப்படி விளையாடியது தென்னாப்பிரிக்கா. அதைவிடவும் இரு மடங்கு ஓவர்கள் விளையாடி இங்கிலாந்து சாதனை படைத்திருந்தது.

இதையும் படிக்க: ஐபிஎல் போட்டியில் அறிமுகமாகும் மாற்று வீரர் விதிமுறை: அறிவிப்பு

இந்த நிலையில், முதல் இன்னிங்ஸில் இமாலய இலக்கை குவித்த இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது பாகிஸ்தான். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம்-உல்-ஹக் மற்றும் அப்துல்லா ஷஃபீக் களமிறங்கினர். இந்த இணை மிகவும் தன்னம்பிக்கையுடன் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. இங்கிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு தங்களது விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் இருவரும் சிறப்பாக விளையாடினர். இங்கிலாந்து வீரர்கள் சில கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டது அதற்கு ஒரு காரணம். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி விக்கெட் இழப்பின்றி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 181 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், இமாலய ரன்களை குவித்துள்ள இங்கிலாந்துக்கு எதிராக வலுவான தொடக்கம் கிடைத்துள்ளது.

இதையும் படிக்க: ரிக்கி பாண்டிங் மருத்துவமனையில் அனுமதி

இமாம்-உல்-ஹக் 90 ரன்களுடனும், அப்துல்லா ஷஃபீக் 89 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். வலுவான தொடக்கமாக இருப்பினும் பாகிஸ்தான் அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 476 ரன்கள் பின் தங்கியுள்ளன. ஃபாலோ ஆன்-ஐத் தவிர்க்க பாகிஸ்தான் அணி இன்னும் 277 ரன்கள் குவிக்க வேண்டும்.

இரண்டாம் நாள் ஆட்டநேரம் முடிவதற்கு 17 ஓவர்கள் மீதமிருந்தபோதிலும் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT