செய்திகள்

தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியா?: ஹேமங் பதானி பதில்

1st Dec 2022 03:08 PM

ADVERTISEMENT

 

பிசிசிஐ தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு தான் போட்டியிடவில்லை என தமிழக முன்னாள் வீரர் ஹேமங் பதானி கூறியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை, டி20 உலகக் கோப்பை என இரண்டிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியது. இதனால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதையடுத்து புதிய தேர்வுக்குழுவை நியமிப்பதற்கான விளம்பரத்தை வெளியிட்டது பிசிசிஐ. இதனால் தற்போது தேர்வுக்குழுத் தலைவராக உள்ள சேதன் சர்மா மற்றும் அவருடைய குழுவினரின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. 

தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 7 டெஸ்டுகள் அல்லது 30 முதல்தர ஆட்டங்கள் அல்லது 10 ஒருநாள் மற்றும் 20 முதல்தர ஆட்டங்களில் விளையாடியிருக்க வேண்டும், குறைந்தபட்சம் 5 வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று இதற்கான விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் நவம்பர் 28-க்குள் அனுப்பப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. தேர்வுக்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய புதிய குழுவை நியமிக்கவுள்ளது பிசிசிஐ. அவர்களின் பரிந்துரையின் பேரில் தேர்வாகும் உறுப்பினர்களை பிசிசிஐ அறிவிக்கும். 

ADVERTISEMENT

பிசிசிஐ தேர்வுக்குழுத் தலைவர் அல்லது உறுப்பினராக முன்னாள் வீரர்களான நயன் மோங்கியா, மனிந்தர் சிங், ஷிவ் சுந்தர் தாஸ், அஜய் ராத்ரா, ஹேமங் பதானி போன்றோர் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனவரியில் சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக விளையாடவுள்ள இந்திய அணியைப் புதிய தேர்வுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள்.

இந்நிலையில் தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு தான் விண்ணப்பிக்கவில்லை என ஹேமங் பதானி கூறியுள்ளார். ட்விட்டரில் அவர் தெரிவித்ததாவது:

அனைவருக்கும் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். பிசிசிஐயின் தேர்வுக்குழுவில் பங்களிப்பது கெளரவமான விஷயம் என்றாலும் ஊடகங்களில் கூறியுள்ளது போல தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு நான் விண்ணப்பிக்கவில்லை என்று கூறியுள்ளார். 

ஹேமங் பதானி, இந்திய அணிக்காக 4 டெஸ்டுகள், 40 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிள்ளார். சன்ரைசர்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக உள்ளார். டிஎன்பிஎல் போட்டியில் மூன்று முறை பட்டம் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT