செய்திகள்

கேகேஆர் அணியின் பயிற்சியாளராகத் தேர்வானது எப்படி?: சந்திரகாந்த் பண்டிட் பேட்டி

20th Aug 2022 03:21 PM

ADVERTISEMENT

 

கேகேஆர் அணியின் பயிற்சியாளராகத் தேர்வானது குறித்து சந்திரகாந்த் பண்டிட் பேட்டியளித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியில் விளையாடும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

2022 ஐபிஎல் போட்டியில் கேகேஆர் அணி 14 ஆட்டங்களில் 6-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 7-ம் இடத்தைப் பிடித்தது. இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக மெக்குல்லம் நியமிக்கப்பட்டதையடுத்து கேகேஆர் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து அவர் விலகினார். இதையடுத்து கேகேஆர் அணிக்குப் புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். 

ADVERTISEMENT

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மத்தியப் பிரதேசம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வென்று, போட்டியின் 87 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் ஆனது. 41 முறை ரஞ்சி சாம்பியனான மும்பையை வீழ்த்தி வெற்றிக் கோப்பையை மத்தியப் பிரதேச அணி வெல்ல முக்கியக் காரணம் - பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் (60). இந்திய அணிக்காக 5 டெஸ்டுகளும் 36 ஒருநாள் ஆட்டங்களும் விளையாடியவர் பண்டிட். ரஞ்சி கோப்பைப் போட்டியில் மும்பை, மத்தியப் பிரதேச அணிகளுக்காக விளையாடியுள்ளார். பண்டிட் பயிற்சியில் ஆறு அணிகள் (மும்பை மூன்று முறை, விதர்பா இருமுறை, மத்தியப் பிரதேசம் ஒருமுறை) ரஞ்சி கோப்பைப் போட்டியை வென்றுள்ளன. 

இந்நிலையில் கேகேஆர் அணியின் தலைமைப் பயிற்சியாளராகத் தேர்வானது பற்றி சந்திரகாந்த் பண்டிட் ஒரு பேட்டியில் கூறியதாவது:

ரஞ்சி கோப்பைப் போட்டியின்போது கேகேஆர் அணியின் தலைமைச் செயல் அதிகாரி வெங்கி மைசூர் எனக்கு மெசேஜ் செய்தார். இறுதிச்சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற வாழ்த்தினார். ஒருநாள் சந்திப்போம் என்றார். அப்போது நான் உணரவில்லை. இங்கிலாந்தில் நான் இருந்தபோது மும்பையில் இருக்கிறீர்களா எனக் கேட்டு மெசேஜ் அனுப்பினார். பிறகு என்னை போனில் அழைத்து, எப்போது மும்பை வருவீர்கள் என்று கேட்டார். அப்போதுதான் எனக்குச் சந்தேகம் வந்தது. மும்பைக்கு நான் திரும்பிய பிறகு என்னைச் சந்தித்து, கேகேஆர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் வாய்ப்பை ஏற்றுக்கொள்ளச் சொன்னார் வெங்கி மைசூர். கேகேஆர் அணியின் குடும்பத்தில் ஒருவராக என்னை இணைத்துக் கொண்டதற்குப் பெருமைப்படுகிறேன். 

இன்று என்னைப் பற்றி பேசும் விஷயங்களுக்கு எல்லாம் அணியின் வீரர்களும் இதர பயிற்சியாளர்களுமே காரணம். கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவும் இன்னொரு முக்கியக் காரணம். வீரர்கள் தான் நல்ல பயிற்சியாளர்களை உருவாக்குகிறார்கள். பயிற்சியாளர்கள் நல்ல வீரர்களை உருவாக்குவதில்லை. வீரர்கள் தான் கடுமையாக உழைக்கிறார்கள். அவர்களுக்குதான் எல்லாவித பாராட்டுகளும் சென்று சேரவேண்டும். ஒவ்வொரு பயிற்சியாளருக்கு ஒரு வழிமுறை இருக்கும். என்னுடைய வழிமுறை நல்லவிதமாக வேலை செய்கிறது. அதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் வீரர்கள் உங்கள் பேச்சைக் கேட்கிறார்கள். அந்த அறிவுரைகளைக் கொண்டு தங்களுடைய ஆட்டத்திறனை மேம்படுத்துகிறார்கள். என்னுடைய வழிமுறை பலருக்கும் பிடிக்காது என எனக்குத் தெரியும். ஆனால் ஆட்ட முடிவுகளைப் பார்த்து அவர்கள் மனம் மாறுகிறார்கள். விளையாட்டோ அலுவலகமோ கட்டுப்பாடு, ஒழுக்கம் மிகவும் முக்கியம் என்றார்.     

Tags : Pandit KKR
ADVERTISEMENT
ADVERTISEMENT