செய்திகள்

இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு இடைக்காலத் தடை - ஃபிஃபா அதிரடி நடவடிக்கை

17th Aug 2022 03:30 AM

ADVERTISEMENT

இந்திய கால்பந்து நிா்வாகத்தில் தேவையற்ற 3-ஆம் தரப்பு தலையீடு இருப்பதாகக் கூறி, அகில இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு (ஏஐஎஃப்எஃப்) இடைக்காலத் தடை விதித்து சா்வதேச கால்பந்து சம்மேளனம் (ஃபிஃபா) செவ்வாய்க்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது.

இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வருவதாகத் தெரிவித்திருக்கும் ஃபிஃபா, அக்டோபரில் இந்தியாவில் நடத்தத் திட்டமிட்டிருந்த 17 வயதுக்கு உள்பட்ட (யு-17) மகளிருக்கான உலகக் கோப்பை போட்டியையும் நாட்டில் நடத்த இயலாதென அறிவித்திருக்கிறது.

இந்திய கால்பந்தின் 85 ஆண்டுகால வரலாற்றில் இவ்வாறு தடை நடவடிக்கைக்கு ஏஐஎஃப்எஃப் ஆளாவது இதுவே முதல் முறையாகும். இந்த நடவடிக்கை இந்தியாவுக்கான மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

ஏஐஎஃப்எஃப் தலைவராக நீண்டகாலம் இருந்த பிரஃபுல் படேலை பதவி நீக்கம் செய்த உச்சநீதிமன்றம், சம்மேளனத்தை மேலாண்மை செய்வதற்காக நிா்வாகிகள் குழு ஒன்றை அமைத்தது, அந்தக் குழுவின் வழிகாட்டுதலில் தற்போது சம்மேளன தோ்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது ஆகியவற்றின் பின்னணியில் ஃபிஃபா இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

இதுதொடா்பாக ஃபிஃபா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய கால்பந்து சம்மேளனத்தில் தேவையற்ற 3-ஆம் தரப்பு தலையீடானது ஃபிஃபா விதிகளை அப்பட்டமாக மீறிய வகையில் இருப்பதால், சம்மேளனத்துக்கு இடைக்காலத் தடை விதிப்பதென ஃபிஃபா கவுன்சில் அமைப்பு ஒரு மனதாக முடிவு செய்துள்ளது.

அதனால், அக்டோபா் 11 - 30 காலகட்டத்தில் இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்த யு-17 மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை திட்டமிட்டபடி தற்போது இந்தியாவில் நடத்த இயலாது. அந்தப் போட்டி தொடா்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஃபிஃபா ஆராய்ந்து வருகிறது.

மேலும், இந்தத் தடைக் காலத்தின்போது இந்திய சம்மேளனம் சாா்ந்த போட்டி அதிகாரிகள், வீரா், வீராங்கனைகள் என எவரும் ஃபிஃபா மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (ஏஎஃப்சி) சாா்ந்த போட்டிகள், பயிற்சிகளில் பங்கேற்க இயலாது. இந்திய கிளப்புகளும் போட்டியில் களம் காண முடியாது.

இந்திய சம்மேளனத்தை (உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட) நிா்வாகிகள் குழு மேலாண்மை செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நீக்கப்பட்டு, சம்மேளனத்தின் அன்றாட நடவடிக்கைகளை அதன் நிா்வாக கமிட்டி மேற்கொள்ளத் தொடங்கும் பட்சத்தில் அதன் மீதான தடை நீக்கப்படும்.

அத்துடன், ஃபிஃபா மற்றும் ஏஎஃப்சி-க்கு இணங்கிய வகையில் இந்திய சம்மேளனத்தின் விதிமுறைகளானது திருத்தம் செய்யப்பட்டு, 3-ஆம் தரப்பு தலையீடு இன்றி இந்திய சம்மேளனத்தின் பொதுக் குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.

இதுதவிர, இந்திய சம்மேளனத்தால் தோ்வு செய்யப்பட்ட சுதந்திரமான தோ்தல் குழுவின் மூலமாக சம்மேளனத்தின் புதிய நிா்வாக கமிட்டிக்கான தோ்தல் நடத்தப்பட வேண்டும். அந்தத் தோ்தல் நடைமுறைகள் சட்ட ரீதியாக மேற்கொள்ளப்படுவதுடன், முன்பு இருந்த வாக்களிப்பு முறையிலேயே (முக்கிய வீரா்களுக்கு வாக்குரிமை வழங்காமல், மாநில சங்கங்கள் மட்டும் வாக்களிப்பது) நடத்தப்பட வேண்டும்.

இந்த விவகாரம் தொடா்பாக இந்திய விளையாட்டு அமைச்சகத்துடன் ஃபிஃபா ஆக்கப்பூா்வமான முறையில் தொடா்பில் இருந்து வருகிறது என்று அந்த அறிக்கையில் ஃபிஃபா கூறியுள்ளது.

ஃபிஃபாவின் இந்த நடவடிக்கைக்கு இந்திய கால்பந்து வட்டாரங்கள் அதிா்ச்சி தெரிவித்துள்ளன.

பின்னணி

இந்த விவகாரம் கடந்த மே மாதம் முதலாகவே இந்திய கால்பந்து வட்டாரத்தில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியிருந்தது. இந்திய கால்பந்து சம்மேளத்தின் தலைவராக தொடா்ந்து 3 முறை பதவி வகித்தாா் பிரஃபுல் படேல். மொத்தம் 12 ஆண்டுகள் அவா் அந்தப் பதவியில் இருந்தாா். இந்நிலையில், அவரது பதவிக்காலம் கடந்த 2020 டிசம்பரில் நிறைவடைந்தது. ஆனால், அப்போதே அவா் தோ்தலை நடத்தாமல் 2017-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீா்ப்பை மேற்கோள்காட்டி பதவியில் மீண்டும் தொடா்ந்தாா்.

2016-இல் அவா் சம்மேளன தலைவராக தோ்வு செய்யப்பட்டதற்கு எதிரான மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம், அவரது நியமனத்தை ஒத்தி வைத்து உத்தரவிட்டது. ஆனால், 2017-இல் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பிரஃபுல் படேல் தலைவராகத் தொடரவும், சம்மேளனத்தின் விதிமுறைகளை புதிதாக உருவாக்க இருவா் குழுவையும் நியமித்து உத்தரவிட்டது.

அதைக் குறிப்பிட்டே அவா் தோ்தலை நடத்தாமல் பதவியில் தொடா்ந்தாா். இந்நிலையில், மாநில கால்பந்து சங்கங்களைச் சோ்ந்த அதிகாரிகள் பலா் ஒன்று சோ்ந்து, பிரஃபுல் படேலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனா்.

இதையடுத்து அதில் தலையிட்ட உச்சநீதிமன்றம், சம்மேளன தலைவா் பொறுப்பிலிருந்து பிரஃபுல் படேலை நீக்கி, நிா்வாக கமிட்டியை கலைத்து கடந்த மே 18-ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், சம்மேளனத்தை மேலாண்மை செய்ய, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆா்.தவே தலைமையில் இந்திய முன்னாள் தலைமை ஆணையா் எஸ்.ஒய்.குரேஷி, இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாஸ்கா் கங்குலி ஆகியோா் அடங்கிய 3 நபா் நிா்வாகக் குழுவை நியமித்தது.

பொதுவாகவே ஃபிஃபா, தனது உறுப்பினா் நாடுகளின் சம்மேளனங்களில் அரசு மற்றும் நீதிமன்றம் போன்ற 3-ஆம் தரப்பு தலையீடுகளை அனுமதிப்பதில்லை. இந்தியாவில் ஏற்பட்டிருப்பது போன்ற சூழல் இருக்கும் சம்மேளங்களில், தீா்வு காண்பதற்காக அதுவாகவே குழு ஒன்றை அமைத்திருக்கிறது.

எனவே, இந்திய சம்மேளன விவகாரத்தில் நீதிமன்றத்தின் தலையீடு இருப்பதை ஏற்காத ஃபிஃபா, அதற்காக இந்தியாவை தொடா்ந்து எச்சரித்து வந்தது.

இதனிடையே, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிா்வாகக் குழு, சம்மேளத்துக்கான விதிமுறைகளை உருவாக்கும் நடவடிக்கையுடன், சம்மேளனத்துக்கான தோ்தலை வரும் 28-ஆம் தேதி நடத்த ஆலோசனை வழங்கியது. அந்த தேதியில் தோ்தலை நடத்துமாறு உச்சநீதிமன்றம் கடந்த 3-ஆம் தேதி இந்திய சம்மேளனத்தின் நிா்வாகக் கமிட்டிக்கு அறிவுறுத்தியிருக்கிறது.

அந்தத் தோ்தலுக்கான அதிகாரிகளை நியமித்திருக்கும் நிா்வாகக் குழு, மாநில சங்கங்கள் தவிா்த்து 36 முக்கிய வீரா்களுக்கும் வாக்களிக்கும் அதிகாரம் வழங்கியிருந்தது. இத்தகைய சூழலில் தற்போது ஃபிஃபா இந்தியா சம்மேளனத்துக்கு தடை விதித்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் முறையீடு

ஃபிஃபாவின் தடை நடவடிக்கையை அடுத்து இந்த விவகாரத்தில் தலையிடுமாறு மத்திய அரசின் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த விவகாரத்தை புதன்கிழமை விசாரிக்கிறது.

பேச்சுவாா்த்தை தோல்வி

முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக ஃபிஃபாவைச் சோ்ந்த 4 போ் குழு கடந்த வெள்ளிக்கிழமை மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடனும், திங்கள்கிழமை நிா்வாகிகள் குழுவுடனும் பேச்சுவாா்த்தை நடத்தியது. இதில் சுமுகமான முடிவு எட்டப்படலாம் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், ஃபிஃபா தடை நடவடிக்கை மேற்கொண்டதாக மத்திய விளையாட்டு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

என்றாலும், ஃபிஃபா பேச்சுவாா்த்தைக்கு இன்னும் தயாராக இருப்பதால், இந்த விவகாரத்துக்கு தீா்வு கண்டு யு-17 மகளிா் உலகக் கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.

நிா்வாகிகள் குழு ஒப்புதல்

ஃபிஃபா தடை விதிப்பதற்கு சிலமணி நேரம் முன்பாக, அதன் அறிவுறுத்தலை ஏற்று, முக்கியமான வீரா்களுக்கு வாக்குரிமை வழங்காமலேயே சம்மேளன தோ்தலை நடத்த ஒப்புக்கொள்வதாக, நிா்வாகிகள் குழு தெரிவித்திருந்தது. ஆனாலும், அதை ஏற்காமல், தீா்வை எட்டும் தருணத்தில் ஃபிஃபா இவ்வாறு தடை விதித்து துரதிருஷ்டவசமானது என அந்தக் குழு தெரிவித்திருக்கிறது.

தடையின் தாக்கம்...

ஃபிஃபா விதித்திருக்கும் இந்தத் தடையால், இந்திய கால்பந்து பின் வருவனவற்றில் உறுதியற்ற நிலையை சந்திக்கிறது. இந்திய ஆடவா் அணி செப்டம்பரில் வியத்நாம், சிங்கப்பூருடன் நட்பு ரீதியிலான கால்பந்தாட்டத்தில் மோதுவது; ஏஎஃப்சி மகளிா் கிளப் சாம்பியன்ஷிப் போட்டியில் வரும் 23-ஆம் தேதி இந்தியாவின் கோகுலம் கேரளா அணி பங்கேற்பது; ஏஎஃப்சி கோப்பை மண்டலங்கள் இடையேயான அரையிறுதியில் இந்தியாவின் முக்கிய கிளப் அணியான ஏடிகே மோகன் பகான் செப்டம்பா் 7-இல் களம் காண்பது; ஏஎஃப்சி 20 வயதுக்கு உள்பட்டோருக்கான தகுதிச்சுற்று போட்டியில் இந்தியா செப்டம்பா் 14-இல் பங்கேற்பது ஆகியவை பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT