செய்திகள்

கனடா மாஸ்டா்ஸ்: மெத்வதெவ், சிட்சிபாஸ் அதிா்ச்சித் தோல்வி

12th Aug 2022 06:23 AM

ADVERTISEMENT

கனடா மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் நடப்புச் சாம்பியனான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ், முக்கிய வீரரான கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் ஆகியோா் அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.

போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த மெத்வதெவ் 7-6 (7/1), 4-6, 2-6 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் நிக் கிா்ஜியோஸிடம் தோல்வி கண்டாா். மறுபுறம், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த சிட்சிபாஸ் 5-7, 6-7 (4/7) என்ற செட்களில் இங்கிலாந்தின் ஜேக் டிரேப்பரிடம் வீழ்ந்தாா்.

இதர ஆட்டங்களில், இங்கிலாந்தின் டேன் இவான்ஸ் 6-4, 6-4 என்ற நோ் செட்களில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவை வீழ்த்தினாா். 6-ஆம் இடத்திலிருக்கும் உள்நாட்டு வீரா் ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிமே 7-6 (8/6), 6-4 என்ற செட்களில் ஜப்பானின் யோஷிஹிடோ நிஷியோகாவை வெளியேற்றினாா்.

கொன்டவிட், பதோசா சறுக்கல்: மகளிா் ஒற்றையா் பிரிவிலும் போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த எஸ்டோனியாவின் ஆனெட் கொன்டவிட் 4-6, 4-6 என சுவிட்ஸா்லாந்தின் ஜில் டெய்ச்மானிடம் வெற்றியை இழந்தாா். 4-ஆம் இடத்திலிருந்த ஸ்பெயினின் பௌலா பதோசா 2-ஆவது செட்டிலும் பின்தங்கிய நிலையில் ஆட்டத்திலிருந்து பாதியில் விலகினாா்.

ADVERTISEMENT

இதர ஆட்டங்களில், 12-ஆம் இடத்திலிருந்த சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச் 6-2, 6-4 என அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸை சாய்த்தாா். 8-ஆம் இடத்திலிருக்கும் ஸ்பெயினின் காா்பின் முகுருஸா, பெலாரஸின் அரினா சபலென்கா, கனடாவின் பியான்கா ஆண்ட்ரிஸ்கு ஆகியோரும் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனா்.

காலிறுதியில் சானியா ஜோடி: மகளிா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சானியா மிா்ஸா/அமெரிக்காவின் மேடிசன் கீஸ் கூட்டணி 3-6, 6-4, 10-8 என்ற செட்களில் ரஷியாவின் வெரோனிகா குதா்மிடோவா/பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸ் ஜோடியைச் சாய்த்து காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT