செய்திகள்

நியூசி. ஒப்பந்தப் பட்டியலில் இருந்து டிரெண்ட் போல்ட் விடுவிப்பு

10th Aug 2022 12:35 PM

ADVERTISEMENT

 

கிரிக்கெட் உலகம் மாறிக்கொண்டிருக்கிறது என்பதற்கு இன்னொரு உதாரணமாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்திலிருந்து பிரபல வீரர் டிரெண்ட் போல்ட் விலகியுள்ளார்.

33 வயது டிரெண்ட் போல்ட், நியூசிலாந்து அணிக்காக 78 டெஸ்டுகள், 93 ஒருநாள், 44 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 317 விக்கெட்டுகளும் ஒருநாள் கிரிக்கெட்டில் 169 விக்கெட்டுகளும் டி20யில் 62 விக்கெட்டுகளும் எடுத்து நியூசிலாந்து அணியின் முக்கிய வீரராக உள்ளார்.

இந்நிலையில் பணிச்சுமை, குடும்பத்தினருடன் கூடுதல் நேரம் செலவழிக்க வேண்டும் போன்ற காரணங்களால் தன்னை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்திலிருந்து விலக்கிக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார் டிரெண்ட் போல்ட். இதனை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியமும் ஏற்றுக்கொண்டு அவரை விடுவித்துள்ளது.

ADVERTISEMENT

நியூசிலாந்து அணிக்காக 12 வருடங்களாக விளையாடி வருகிறேன். என் மனைவி கெர்ட் மற்றும் மூன்று குட்டி மகன்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளேன். குடும்பத்துக்கு முன்னுரிமை கொடுத்து கிரிக்கெட்டுக்குப் பிறகான வாழ்க்கைக்காகத் தயார்படுத்திக்கொள்கிறேன். ஒப்பந்தம் இல்லாததால் நியூசிலாந்து அணிக்குத் தேர்வாகும் வாய்ப்பை இம்முடிவு பாதிக்கும் என எனக்குத் தெரியும். வேகப்பந்து வீச்சாளராகக் குறைவான காலமே விளையாட முடியும் என்பதால் என்னுடைய வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்துக்கு நகர்கிறேன் என்று தனது முடிவு குறித்து விளக்கமளித்துள்ளார் போல்ட். 

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து போல்ட் ஓய்வு பெறவில்லையென்றாலும் இனிமேல் அவரை உலகக் கோப்பை போன்ற முக்கியமான சர்வதேசப் போட்டிகளில் மட்டுமே காணமுடியும் எனத் தெரிகிறது. 2022 ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக 16 ஆட்டங்களில் விளையாடினார் போல்ட். தற்போதைய முடிவால் டி20 லீக் போட்டிகளில் டிரெண்ட் போல்டின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT