செய்திகள்

அடுத்தது என்ன?: மகளிர் அணி பயிற்சியாளராக மீண்டும் தேர்வாகாத டபிள்யூ.வி. ராமன்

14th May 2021 02:54 PM

ADVERTISEMENT

 

இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக மீண்டும் தேர்வாகாத டபிள்யூ.வி. ராமன், அடுத்த பயணத்தை எதிர்நோக்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.

2018 டிசம்பரில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் டபிள்யூ.வி. ராமன், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகத் தேர்வானார். அவர் பயிற்சியாளராக இருந்த காலக்கட்டத்தில் இந்திய மகளிர் அணி, 2020 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. எனினும் கடந்த மார்ச்சில் இந்தியாவில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள், டி20 தொடர்களில் இந்திய அணி தோல்வியடைந்தது. 

2018 ஜூலை முதல் நவம்பர் வரை இந்திய மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரமேஷ் பவார் பணியாற்றினார். 2018 மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. எனினும் அப்போட்டியின்போது பயிற்சியாளர் ரமேஷ் பவார் மற்றும் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் இடையே மோதல் ஏற்பட்டது. போட்டி முடிவடைந்த பிறகு ரமேஷ் பவாரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படவில்லை.

ADVERTISEMENT

கடந்த ஏப்ரல் 13 அன்று இந்திய மகளிர் அணிக்கான புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனத்துக்கு விண்ணப்பங்களை பிசிசிஐ கோரியது. இதற்கு ரமேஷ் பவார், டபிள்யூ.வி. ராமன் உள்பட 35 பேர் விண்ணப்பித்தார்கள். இதன்படி, மதன் லால் தலைமையிலான தேர்வுக்குழு, முன்னாள் பயிற்சியாளர் ரமேஷ் பவாரைப் பயிற்சியாளராகப் பரிந்துரை செய்தது. இதையடுத்து இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக ரமேஷ் பவார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ நேற்று அறிவித்தது. 

இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக மீண்டும் தேர்வாகாத டபிள்யூ.வி. ராமன், ட்விட்டரில் கூறியதாவது:

ஆதரவையும் அன்பான வார்த்தைகளையும் வெளிப்படுத்தியவர்களால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன். அடுத்தது என்னது என்கிற இரு சொற்களைக் கொண்டுதான் என் வாழ்க்கையை வாழ்ந்துள்ளேன். அதேபோல இப்போதும் இருப்பேன். அனைவருக்கும் நன்றி. பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார். மற்றொரு ட்வீட்டரில் அவர் கூறியதாவது: பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ரமேஷ் பவாருக்கு வாழ்த்துகள். உங்கள் வழிகாட்டுதலில் இந்திய மகளிர் அணி சிறப்பாக விளையாடும் என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT